யங்கூன்: மியன்மாரின் புதிய ராணுவ ஆதரவு அரசாங்கம், எதிர்க்கட்சி ஆயுதக் குழுக்களுடன் ஜூலை மாத இறுதிக்குள் அமைதிப் பேச்சுவார்த்தைகளை நடத்த விரும்புகிறது.
அந்நாட்டின் புதிய அதிபராகப் பதவியேற்றுள்ள மின் ஆங் ஹிலெய்ங் இதனைத் தெரிவித்தார். இருப்பினும், முக்கியப் போராளிக் குழுக்கள் இரண்டு, செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 21), அரசாங்கத்தின் இந்த அழைப்பை நிராகரித்துவிட்டன.
ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு மியன்மாரில் ராணுவப் புரட்சிக்குத் தலைமை தாங்கியவர் மின் ஆங் ஹிலெய்ங். அந்தப் புரட்சியால் மியன்மார் மோசமான உள்நாட்டுப் போரில் சிக்கியது.
போர்நிறுத்த ஒப்பந்தத்தில் இடம்பெறாத கிளர்ச்சிக் குழுக்கள் 100 நாள்களுக்குள் பேச்சுவார்த்தையில் சேரவேண்டும் என்று தாம் விரும்புவதாக அரசாங்கக் கூட்டத்தில் மியன்மார் அதிபர் தெரிவித்தார்.
கரேன் தேசிய ஒன்றியம் (KNU), சின் தேசிய முன்னணி (CNF), அகில பர்மிய மாணவர்கள் ஜனநாயக முன்னணி உள்ளிட்ட எதிர்க்கட்சிக் குழுவினர் பற்றியும் அவர் குறிப்பிட்டார்.
2021 ராணுவப் புரட்சிக்கு முன்பு நடைமுறையில் இருந்த ‘தேசியப் போர்நிறுத்த ஒப்பந்தத்தில்’ கையெழுத்திட்டவர்கள் குறித்தும் ஜெனரல் மின் ஆங் ஹிலெய்ங் தமது உரையில் குறிப்பிட்டார்.
ஆனால், ‘கேஎன்யு’ ஏற்கெனவே அந்த ஒப்பந்தத்திலிருந்து விலகியதைச் சுட்டிய அதன் பேச்சாளர், மீண்டும் பேச்சுவார்த்தைக்கோ அந்த ஒப்பந்தப் பாதைக்கோ திரும்பும் எண்ணமில்லை என்றார்.
‘சிஎன்எஃப்’ குழு, ராணுவத் தாக்கம் இல்லாத, ஜனநாயக ஒன்றிய நடைமுறையை விரும்புவதாக அதன் பேச்சாளர் கூறினார்.


