நெப்பிடோ: மியன்மார் ராணுவ ஆட்சியின் தலைவர் மூத்த தளபதி மின் ஆங் ஹ்லேங் கடந்த ஏப்ரல் 3ஆம் தேதி அந்நாட்டின் நாடாளுமன்றத்தால் அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
அவர் தற்போது 4,335 கைதிகளை விடுவிப்பதற்கான அனுமதியை வழங்கியிருப்பதாக அந்நாட்டின் அதிகாரபூர்வ தொலைக்காட்சி வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 17) செய்தி வெளியிட்டது. கடந்த ஆறு மாதங்களில் கைதிகள் விடுதலை செய்யப்படுவது இது மூன்றாவது முறையாகும்.
எம்ஆர்டிவி என்ற அந்தத் தொலைக்காட்சியின் அறிவிப்பில், கைதிகளின் பெயர்கள் வெளியிடப்படவில்லை.
ஜனவரி மாதத்தில் கொண்டாடப்படும் மியன்மாரின் சுதந்திர தினத்தன்றும் புத்தாண்டு விழா கொண்டாடப்படும் ஏப்ரல் மாதத்திலும் இதுபோன்ற பொது மன்னிப்பு வழங்கி கைதிகளை விடுவிக்கும் நிகழ்வு இடம்பெறுவது வழக்கம்.
விடுதலை பெறும் கைதிகளில் 179 வெளிநாட்டினர் நாடு கடத்தப்படுவர் எனவும் தெரிவிக்கப்பட்டது. மரண தண்டனை விதிக்கப்பட்டோருக்கு ஆயுள் தண்டனை, ஆயுள் தண்டனை பெற்றோருக்கு 40 ஆண்டுச் சிறை என்ற வகையில் சிலருக்குத் தண்டனைகள் ஆறில் ஒரு பங்காகக் குறைக்கப்படுவதாகவும் அந்தச் செய்தி அறிக்கையில் விளக்கப்பட்டது.
மேல் விவரங்கள் வழங்கப்படவில்லை.
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு 2021ல் மியன்மார் அரசாங்கம் தற்போதைய அதிபரால் கவிழ்க்கப்பட்டதில் இருந்து இதுவரை 30,000 பேர் அரசியல் காரணங்களுக்காகக் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று மனித உரிமை குழுக்களில் ஒன்றான அரசியல் கைதிகளுக்கான உதவி அமைப்பு குறிப்பிட்டுள்ளது.
அவ்வாறு கைதானோரில் ஆங் சான் சூச்சியும் ஒருவர்.

