ஜெனீவா: மியன்மார் பாதுகாப்புப் படைகள் திட்டமிட்ட சித்திரவதைச் செயல்களில் ஈடுபடுவதற்கான ஆதாரங்களைக் கண்டுபிடித்துள்ளதாக ஐக்கிய நாட்டு நிறுவனப் புலன் விசாரணையாளர்கள் செவ்வாய்க்கிழமை (ஆகஸ்ட் 12) கூறியுள்ளனர்.
இதன் தொடர்பில் 16 பக்க அறிக்கையை வெளியிட்ட அவர்கள், மூத்த குற்றவாளிகள் சிலரை அடையாளம் கண்டுள்ளதாகவும் குறிப்பிட்டனர்.
கடந்த ஜூன் 30ஆம் தேதி வரையிலான கிட்டத்தட்ட ஓராண்டு நிலவரம் குறித்த அந்த அறிக்கை, 1,300க்கு மேற்பட்டோரிடமிருந்து திரட்டப்பட்ட தகவல்கள், நூற்றுக்கணக்கானோரின் சாட்சியங்கள், தடயவியல் ஆதாரம், ஆவணங்கள், படங்கள் ஆகியவற்றின் அடிப்படையில் தயாரிக்கப்பட்டுள்ளது.
மியன்மாருக்கான தனிப்பட்ட புலன் விசாரணைக் குழு (IIIM), 2018ஆம் ஆண்டு நிறுவப்பட்டது.
அனைத்துலகச் சட்டம் கடுமையாக மீறப்பட்ட சம்பவங்களை ஆய்வு செய்ய அது அமைக்கப்பட்டது.
பாதிக்கப்பட்டோர் அடி, கழுத்தை நெரித்தல், உடலில் மின்சாரம் பாய்ச்சுதல், குறடுகளைப் பயன்படுத்தி விரல் நகங்களைப் பிடுங்குதல் போன்ற பல்வேறு கொடுமைகளுக்கு ஆளாக்கப்பட்டதாக ‘ஐஐஐஎம்’ கூறியது.
“சம்பவங்களை நேரில் பார்த்தவர்களின் சாட்சியம் உட்பட குறிப்பிடத்தக்க ஆதாரங்களைச் சேகரித்துள்ளோம். மியன்மார் தடுப்புக் காவல் நிலையங்களில் திட்டமிட்ட கொடுஞ்செயல்கள் மேற்கொள்ளப்பட்டதை அவை காட்டுகின்றன,” என்று ‘ஐஐஐஎம்’ குழுவின் தலைவர் நிக்கோலஸ் கூம்ஜியன் கூறியுள்ளார்.
கொடுஞ்செயல்களால் உயிரிழப்புகள் ஏற்பட்டதாகவும் பெற்றோரைக் காணவில்லை என்பதற்காகச் சட்டவிரோதமாகத் தடுத்து வைக்கப்பட்ட சிறுவர்களும் கொடுமைக்கு ஆளானதாகவும் அறிக்கை கூறுகிறது.
தொடர்புடைய செய்திகள்
இதன் தொடர்பில் ‘ஐஐஐஎம்’ குழு கிட்டத்தட்ட 25 முறைக்குமேல் தகவல்களைக் கோரியபோதும் மியன்மார் அரசாங்கம் பதிலளிக்கவில்லை. குழுவினர் அந்நாட்டிற்குச் செல்வதற்கும் அது அனுமதி வழங்கவில்லை.
அமைதியையும் பாதுகாப்பையும் உறுதிசெய்யும் கடமை தனக்கிருப்பதாகக் கூறும் மியன்மார் ராணுவம் கொடுஞ்செயல்கள் நடந்ததாகக் கூறப்படுவதை நிராகரித்தது. மேலும், பயங்கரவாதிகளால் பதற்றம் ஏற்படுவதாகவும் அது கூறியது.