தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

மியன்மார்: மீட்புப் பணி தீவிரம், உயிர் பிழைத்திருக்கும் வாய்ப்பு குறைகிறது

2 mins read
638a132c-6b4d-4c0f-8e0c-cfc9aee7bf3d
மியன்மாரில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து மண்டலே நகரில் சரிந்து விழுந்த கட்டடத்தில் மீட்புப் பணியாளர்கள். - படம்: ராய்ட்டர்ஸ்

பேங்காக்: மியன்மாரில் மண்டலே நகருக்கு அருகே மையம் கொண்ட நிலநடுக்கத்தில் பல அடுக்குமாடிக் கட்டடங்கள், பெளத்த ஆலயங்கள், பள்ளிவாசல்கள் எனப் பல கட்டடங்கள் சரிந்து விழுந்தன.  இதைத் தொடர்ந்து மீட்புப் பணியாளர்கள் அவசர கதியில் பணியில் ஈடுபட்டு வருவது ஒருபுறம், மற்றொருபுறம் தங்கள் அன்புக்குரியவர்களின் இழப்பை தாளா துயருடன் எதிர்கொள்ளவேண்டிய நிலையில் மக்கள்.   அடக்குமுறை ராணுவ ஆட்சியை எதிர்த்து உள்நாட்டில் நான்காவது ஆண்டாகத் தொடரும் போரால் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன.

அத்துடன், நிலநடுக்கத்தில் துண்டிக்கப்பட்ட மின்சார இணைப்புகள், பாளம் பாளமாக பிளந்த நிலையில் சாலைகள், மீட்புப் பணிக்கு தேவையான கருவிகளுக்கு நிலவும் தட்டுப்பாடு என மியன்மார் பெரும் சவால்களை சந்தித்து வருவதாகக் கூறப்படுகிறது.  

“அங்கு குறைந்தது நூறு பேராவது சிக்கியுள்ளனர்,” என்றார் சரிந்து விழுந்த அடுக்குமாடிக் கட்டடத்துக்கு அருகே அமர்ந்திருந்த தோ ஸின் எனப் பெயர்கொண்ட தொண்டூழியர். “இருப்பதைக் கொண்டு எங்களால் முடிந்த அளவு செயல்படுகிறோம்,” என்று அவர் தெரிவித்தார். 

வெள்ளிக்கிழமை (மார்ச் 28) பிற்பகல் 12.50 மணிவாக்கில் இந்த நிலநடுக்கம் நிகழ்ந்தது. இந்த வட்டாரத்தில் கடந்த நூறு ஆண்டுகளில் இந்த அளவு சக்திவாய்ந்த நிலநடுக்கம் இதற்கு முன் இரண்டு தடவைதான் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. 

இந்தப் பேரிடர் சம்பவம் எந்த அளவுக்கு அந்நாட்டில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது என்பது சரியாகத் தெரியவில்லை. மியன்மாரை ஆளும் ராணுவ ஆட்சி மன்றம் நாட்டின் ஆறு பகுதிகளில் அவசரகால நிலையை அறிவித்துள்ளது. இவற்றில் பல ராணுவ ஆட்சிக்கு எதிராக உள்ள போராளிப் பகுதிகளாகும்.

அங்கு குறைந்த அளவிலான இணைய வசதியுள்ளதாகவும் பல மில்லியன் கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டு உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. 

நிலநடுக்கம் ஏற்பட்டபோது சு வாய் லின் என்பவர் தமது கணவரையும், கணவரின் தாயாரையும் காப்பாற்றி தாங்கள் வசித்த அடுக்குமாடிக் கட்டடத்தில் இருந்து தப்பினார். பின்னர் அவரின் கணவர் 90 வயது அண்டை வீட்டுக்காரரை காப்பாற்ற மீண்டும் கட்டடத்தினுள் நுழைந்தார்.

அந்தத் தருணத்தில் கட்டடம் சரிந்து விழ அவரும் அவரது அண்டை வீட்டுக்காரரும் மடிந்ததாகக் கூறப்படுகிறது.

“எனது வார்த்தைகளால் வலியை வர்ணிக்க முடியாது,” என்று மருத்துவமனையில் கண்ணீருடன் கூறும் ஆறுமாத கர்ப்பிணியான அந்த மாது, “எனது குழந்தை தந்தையின்றி பிறக்கப்போகிறது. நாங்கள் உயிருடன் தப்பிப் பிழைத்திருக்கலாம், ஆனால் எங்கள் இதயம், உணர்வுகள் என அனைத்தும் சுக்குநூறாக சிதறியுள்ளது,” என்று மீளாத் துயரத்துக்கு இடையே தெரிவித்தார்.

குறிப்புச் சொற்கள்