யங்கூன்: போர்க்கால முற்றுகையாலும் மியன்மாருக்கு வழங்கப்படும் அத்தியாவசியப் பொருள்கள் குறைக்கப்பட்டுள்ளதாலும் அந்நாட்டின் மேற்குப் பகுதியில் வாழும் மக்கள் பட்டினியால் வாடுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அப்பகுதியைச் சேர்ந்த மக்கள் உணவு தேடி அலைவதாகக் கூறப்படுகிறது. மூங்கில் குருத்து போன்ற கிடைப்பவற்றை அவர்கள் சாப்பிடுவதாக மனிதாபிமான அமைப்புகள் கூறின.
இதே நிலை நீடித்தால் பசியால் வாடுவோர் எண்ணிக்கை வெகுவாக அதிகரிக்கும் என்று மனிதாபிமான அமைப்புகளைச் சேர்ந்த ஊழியர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
மக்களால் ஜனநாயக முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்தை 2021ஆம் ஆண்டில் அந்நாட்டு ராணுவம் கவிழ்த்தது.
தற்போது அந்நாட்டில் ராணுவ ஆட்சி நடப்பில் உள்ளது.
மியன்மாரில் தலைவிரித்தாடும் உள்நாட்டுப் போரின் காரணமாக பங்ளாதேஷ் எல்லையோரம் உள்ள ராக்கைன் மாநிலம் மிகக் கடுமையாகப் பாதிப்படைந்துள்ளது.