மியன்மாரில் ராணுவ ஆட்சி வலுவிழந்து வருகிறது

மியன்மாரில் ராணுவ ஆட்சி வலுவிழந்து வருகிறது

1 mins read
094662c5-f80f-49c6-a4d0-6475088dcd72
‘கேரன் தேசிய மிதவாத ராணுவத்தின்’ வீரர்கள், மியன்மார் ராணுவம் ஆகாயத் தாக்குதல் நடத்திய ‘மியாவடி’ பகுதிக்கு அருகில் உள்ள இடத்தில் வாகனத்தில் சுற்றுக்காவல் பணியில் ஈடுபட்டுள்ளனர். - படம்: ராய்ட்டர்ஸ்

நேப்பிடா: மியான்மாரை ஆளும் ராணுவம் பல பகுதிகளில் அதன் கட்டுப்பாட்டை இழந்துள்ளது. அனைத்துலக எல்லைப் பகுதிகளில் பெரும்பாலானவை அவற்றில் அடங்கும்.

இதனால் இனவாத ராணுவக் குழுக்கள் விரிவடைந்து, சில வட்டாரங்களை அவற்றின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளதாக மியன்மார் பூசலை ஆராயும் இரண்டு அறிக்கைகள் தெரிவித்தன.

55 மில்லியன் மக்கள்தொகையைக் கொண்டுள்ள மியன்மாரில் 2021ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்திலிருந்து நிலைமை கொந்தளிப்பாகவே உள்ளது.

நோபெல் பரிசு பெற்ற ஆங் சான் சூச்சி அம்மையார் வழிநடத்திய அரசாங்கத்தை அந்நாட்டு ராணுவம் வெளியேற்றியதே அதற்குக் காரணம். அதனால் பல ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன.

மியன்மாரின் இனவாதக் கிளர்ச்சிக் குழுக்கள் ஒன்றிணைந்து, ராணுவத்திற்கு எதிராகச் செயல்படத் தொடங்கின.

மியன்மார் ராணுவம் நாட்டின் மக்கள்தொகையில் 67 விழுக்காட்டினர் வசிக்கும் பகுதிகளில் 86 விழுக்காட்டு நகரங்களில் முழுக் கட்டுப்பாட்டை இழந்துள்ளதாக மியன்மார் சிறப்பு ஆலோசனை மன்றம் கூறியது.

அது குறித்து ராய்ட்டர்ஸ் நிறுவனம் கேட்ட கருத்துக்கு ராணுவப் பேச்சாளர் ஒருவர் பதில் அளிக்கவில்லை.

சென்ற அக்டோபரில், மூன்று இனவாதக் குழுக்கள் ஒன்றிணைந்து ‘ஓப்பரேஷன் 1027’ நடவடிக்கையை வழிநடத்தின. அப்போது மியன்மார் ராணுவம் வலுவிழக்கத் தொடங்கியது.

இனவாதக் குழுக்கள் நடத்திய தொடர்த் தாக்குதல்களால் மியன்மார் ராணுவம் முக்கியப் பகுதிகளிலிருந்து வெளியேறவேண்டிய நிலை ஏற்பட்டது.

குறிப்புச் சொற்கள்