தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

தேர்தல் விவரங்களை வெளியிட்ட மியன்மார் ராணுவ ஆட்சியாளர்கள்

2 mins read
7dc31587-e102-45b6-b092-16a405d5b3e8
ராணுவ ஆட்சியாளர்கள் நடத்தும் தேர்தல் வெறும் கண்துடைப்பு என்று ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். - படம்: ஏஎஃப்பி

யங்கூன்: மியன்மார் தேர்தல் தொடர்பான விவரங்களை அந்நாட்டின் ராணுவ ஆட்சியாளர்கள் வெளியிட்டுள்ளனர்.

தேர்தலுக்கான முழு கால அட்டவணை வெளியிடவில்லை என்றபோதிலும், முதல் சுற்று வாக்களிப்பு மின்மாரின் 102 தொகுதிகளில் நடத்தப்படும் என்று அரசாங்கத்துக்குச் சொந்தமான ஊடகம் மூலம் தகவல் அளிக்கப்பட்டுள்ளது.

மியன்மாரில் மொத்தம் 330 தொகுதிகள் உள்ளன.

மக்கள்தொகை அதிகம் இல்லாத தலைநகரான நேப்பிடாவில் உள்ள அனைத்துத் புகுதிகளிலும் மியன்மாரின் வர்த்தகத் தலைநகர் மற்றும் ஆகப் பெரிய நகரமான யங்கூனின் கால்வாசி பகுதிகளிலும் தேர்தல் நடைபெறுகிறது.

மியன்மாரின் சில பகுதிகளில் உள்நாட்டுப் போர் நடந்து வருகிறது.

அங்கு வாக்களிப்பு தடுத்து நிறுத்தப்படும் என்று மியன்மார் ராணுவத்தை எதிர்த்துப் போரிடும் அமைப்புகள் சுளூரைத்துள்ளன.

மேற்கு ரக்காய்ன் மாநிலத்தில் ஏறத்தாழ அனைத்துப் பகுதிகளும் அரக்கான் அமைப்பின் கட்டுப்பாட்டில் உள்ளன.

வாக்களிப்புக்கான முதல் நாளன்று அம்மாநிலத்தில் உள்ள 17 தொகுதிகளில் மூன்று தொகுதிகளில் மட்டுமே வாக்களிப்பு நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மியன்மாரில் ஆகக் கடைசியாக 2020ஆம் ஆண்டில் தேர்தல் நடைபெற்றது.

அதில் திருவாட்டி ஆங் சான் சூச்சியின் கட்சி அறுதிப் பெரும்பான்மையில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. ஆனால் ஜனநாயக முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்ட அந்த அரசாங்கத்தை மியன்மார் ராணுவம் கவிழ்த்தது.

இந்நிலையில், நடைபெற இருக்கும் தேர்தலைக் கடுமையாக விமர்சிப்பவர்களுக்கும் எதிர்த்து ஆர்ப்பாட்டம் நடத்துவோருக்கும் பத்து ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை விதிக்கப்படலாம் என்று மியன்மாரின் ராணுவ ஆட்சியாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

ராணுவ ஆட்சியாளர்கள் நடத்தும் தேர்தல் வெறும் கண்துடைப்பு என்று ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

குறிப்புச் சொற்கள்