மேரிலேண்ட்: அமெரிக்க ராணுவ முகாமுக்கு அனுப்பிவைக்கப்பட்ட மர்மப் பொட்டலத்தை ஒருவர் திறந்து பார்த்ததால் பலருக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டு, மருத்துவமனைக்குச் சென்றுள்ளனர். அதனை ‘சிஎன்என்’ ஊடகம் வியாழக்கிழமை (நவம்பர் 6) ஒரு செய்தி அறிக்கையில் தெரிவித்துள்ளது.
தலைநகர் வாஷிங்டனின் புறநகர்ப் பகுதியில் உள்ள மேரிலேண்டில் இயங்கும் ‘ஜாயின்ட் பேஸ் ஆண்ட்ரூஸ்’ ராணுவத் தளத்தில் சம்பவம் நடந்துள்ளது. அந்த ராணுவத் தளத்தின் ஒரு கட்டடத்தில் இருந்த அனைவரும் வேறு இடத்துக்கு மாற்றப்பட்டுள்ளனர். அந்தக் கட்டடத்தைச் சுற்றி பாதுகாப்பு அரண் அமைக்கப்பட்டுள்ளது என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
தேசிய ஆகாயப் பாதுகாப்பு தயார்நிலை மையம் இயங்கும் அந்தக் கட்டடத்தில் பணியில் இருந்தபோது பாதிக்கப்பட்டோர், ராணுவ முகாமுக்குள் இயங்கும் மல்காம் குரோவ் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அவர்களது உடல்நிலை பற்றிய விவரங்கள் வெளியிடப்படவில்லை.
விசாரணையில் சம்பந்தப்பட்ட இருவரை மேற்கோள்காட்டி அந்தப் பொட்டலத்தில் வெள்ளைத் தூள் இருந்ததாக சிஎன்என் குறிப்பிட்டுள்ளது. அமெரிக்க அதிபர் பயணம் செய்யும் ‘ஏர்ஃபோர்ஸ்1’ சிறப்பு விமானம் அந்த ராணுவத் தளத்திலிருந்துதான் புறப்படும் என்பது கவனத்துக்குரியது.
முதற்கட்ட விசாரணையில் அபாயகரமான எதுவும் கண்டறியப்படவில்லை என்றாலும் சிறப்புப் புலனாய்வு தொடர்கிறது. சம்பவம் தொடர்பில் அமெரிக்கத் தற்காப்பு அமைச்சும் அந்த ராணுவத் தளமும் கருத்துரைக்கவில்லை.

