கெடாவில் மர்மக் கிருமித்தொற்று அஞ்சப்பட்ட அளவு மோசமானதல்ல

கெடாவில் மர்மக் கிருமித்தொற்று அஞ்சப்பட்ட அளவு மோசமானதல்ல

1 mins read
dd160d69-43a7-4c95-84c8-cee1277eb3f5
சித்திரிப்பு: - yourgenome.org / இணையம்
Google News Preferred Icon

ஆலோர் ஸ்டார்: மலேசியாவின் கெடா மாநிலத்தில் உள்ள யான் மாவட்டத்தில் மர்மமான கிருமித்தொற்றுக் குழுமம் கண்டறியப்பட்டது.

39 பள்ளி மாணவர்களும் பள்ளி ஊழியர்களும் பாதிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது. அந்தக் கிருமித்தொற்று முதலில் அஞ்சப்பட்ட அளவு மோசமானதல்ல என்று தெரிவிக்கப்பட்டுள்ளதாக நியூ ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் ஊடகம் செய்தி வெளியிட்டது.

கிருமித்தொற்றுக்கு ஆளான 39 பேரில் இருவர் மட்டுமே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக மாநில வீடமைப்பு, உள்ளூர் அரசாங்க, சுகாதாரக் குழுத் தலைவர் மன்சோர் ஸக்காரியா கூறினார். 14 வயது பள்ளி மாணவர் ஒருவரும் 30 வயதைத் தாண்டிய பள்ளி பேருந்து ஓட்டுநரும் முதலில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அந்த இருவர்.

இருவரும் குணமடைந்துவரும் அறிகுறிகள் தெரிவதாக அவர் சொன்னார். கண்காணிக்கப்பட்ட மற்ற மாணவர்கள் இப்போது மருத்துவமனையிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

புதிதாக யாரும் கிருமித்தொற்றுக்கு ஆளாகவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

“நிலைமை மோசமானதுபோல் முதலில் தெரிந்தது. ஆனால், முதலில் கருதப்பட்ட அளவு நிலைமை மோசமானதல்ல என்பது சுகாதாரப் பிரிவு விவரித்த பிறகு தெரியவந்தது,” என்று திரு மன்சோர் ஸக்காரியா, கிருமித்தொற்று ஏற்பட்ட இடத்துக்கு நேரில் சென்றபோது விளக்கினார்.

கிருமித்தொற்றுக்கு ஆளானவர்கள் சளிக்காய்ச்சல், பேதி, அரிப்பு போன்ற பிரச்சினைகளுக்கு ஆளானதாகத் தெரிவிக்கப்பட்டது. பலாஸ் முகாம் (Palas Camp) எனப்படும் தனியார் பயிற்சி நிலையம் ஒன்றில் கிருமித்தொற்று ஏற்பட்டது.

குறிப்புச் சொற்கள்
உலகம்மலேசியாகிருமிசுகாதாரம்மருத்துவம்