ஆங் சான் சூ சீயின் இருப்பிடம் குறித்த கேள்விகள்

ஆங் சான் சூ சீயின் இருப்பிடம் குறித்த கேள்விகள்

2 mins read
7a0bc81b-7019-4f23-a9b7-3688a6613df1
ஏப்ரல் 30ஆம் தேதி, மியன்மார் ராணுவ தகவல் குழுவால் வெளியிடப்பட்ட, தேதி குறிப்பிடப்படாத இந்தப் புகைப்படத்தில், ஆங் சான் சூ கீ அடையாளம் வெளியிடப்படாத ஓர் இடத்தில் பேசிக்கொண்டிருப்பது தெரிகிறது. - படம்: ஏஎஃப்பி

பேங்காக்: மியன்மாரின் மிகவும் பிரபலமான அரசியல் கைதியான ஆங் சான் சூ சீயை வீட்டுக் காவலில் வைத்துள்ளதாக ராணுவ ஆட்சிக்குழு அறிவித்து இரண்டு வாரங்களுக்கு மேலாகியும், அவர் எங்கே இருக்கிறார் என்பது குறித்த கேள்விகள் நீடிக்கின்றன.

80 வயதான திருமதி சூ சீயை வீட்டுக் காவலில் வைத்துள்ளதாகவும், அங்கு அவர் தனது மீதமுள்ள சுமார் 18 ஆண்டுகால தண்டனையை அனுபவிப்பார் என்றும் ராணுவ ஆட்சிக்குழு ஏப்ரல் 30ஆம் தேதியன்று அறிவித்தது.

அப்போது, ​​மியன்மார் அரசு ஊடகங்கள், அவர் ஒரு மர இருக்கையில் அமர்ந்து சீருடை அணிந்த இரண்டு அதிகாரிகளுடன் பேசிக்கொண்டிருக்கும் ஒரு புகைப்படத்தை வெளியிட்டிருந்தன. ஆனால், பல பார்வையாளர்கள் அந்தப் புகைப்படத்தின் நம்பகத்தன்மை குறித்தும், அது எப்போது எடுக்கப்பட்டது என்பது குறித்தும் கேள்வி எழுப்பியுள்ளனர்.

அன்று முதல், யாராலும் அவரைத் தனிப்பட்ட முறையில் சந்திக்கவோ அல்லது பேசவோ முடியவில்லை.

இது மீண்டும் அவரது மகன் கிம் ஆரிஸ் (48), தனது தாயைச் சந்திக்க அனுமதி கோரத் தூண்டியது.

“எனது தாயின் உடல்நிலை அல்லது இருப்பிடம் குறித்து எனக்கு இன்னும் சரியான தகவல் எதுவும் இல்லை. அவர் இன்னும் உயிருடன் இருக்கிறாரா என்று எனக்குத் தெரியவில்லை,” என்று திரு ஆரிஸ், மே 9ஆம் தேதி தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.

அவர் மே 7ஆம் தேதியன்று, ‘தி ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்’ நாளிதழிடமும் பேசியிருந்தார், அப்போது தனது தாயின் உடல்நிலை குறித்த கவலைகளை மீண்டும் வலியுறுத்தியிருந்தார். அவருக்கு எலும்பு மற்றும் ஈறு பிரச்சினைகள், இதய நோய், குறைந்த ரத்த அழுத்தம் இருந்ததாக முன்னர் செய்திகள் வெளியாகியிருந்தன.

திரு ஆரிஸ் கடைசியாக இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தனது தாயிடமிருந்து கையெழுத்துக் கடிதம் மூலம் செய்தி பெற்றார்.

முன்னாள் மியன்மார் தலைவர் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளாரா என்பது தங்களுக்கு உறுதியாகத் தெரியவில்லை என்றும் மற்றவர்கள் கூறினர்.

மியன்மாருக்கான முன்னாள் அமெரிக்கத் தூதர் ஸ்காட் மார்சியல், “இது நிகழ வாய்ப்புள்ளது, ஆனால் உறுதியாகத் தெரியவில்லை,” என்று கூறினார்.

“அவரது நிலை, இருப்பிடம் அல்லது தொடர்பு சுதந்திரம் குறித்த எந்த ஆதாரத்தையும் யாருக்கும் வழங்காமல், ‘வீட்டுக் காவல்’ என்று கூறுவதன் மூலம் ராணுவ ஆட்சிக்குழு அரசதந்திரப் பலனைப் பெற விரும்புகிறது,” என்று தேசிய ஒற்றுமை அரசாங்கத்தின் வெளியுறவு அமைச்சர் ஸின் மார் ஆங், ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் கூறினார்.

குறிப்புச் சொற்கள்