நிபந்தனையுடன் கூடிய வீட்டுக் காவலில் இருக்க நஜிப்பிற்கு அனுமதி: மலேசியா

நிபந்தனையுடன் கூடிய வீட்டுக் காவலில் இருக்க நஜிப்பிற்கு அனுமதி: மலேசியா

படம்: பெரித்தா ஹரியான்

18 Sep 2026 - 6:37 pm

2 mins read

கோலாலம்பூர்: மலேசியாவின் முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக், எஞ்சிய தண்டனைக் காலத்தை வீட்டுக் காவலில் இருந்தவாறு நிறைவேற்ற நிபந்தனைகளுடன் கூடிய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

மலேசிய மாமன்னரும் ஜோகூர் சுல்தானுமான இப்ராகிம் சுல்தான் இஸ்கந்தர் தலைமையில் உள்ள கூட்டரசுப் பிரதேசங்களின் மன்னிப்பு வாரியம் அதைத் தெரிவித்தது.

50 மில்லியன் ரிங்கிட் அபராதம் செலுத்தினால் நஜிப் தமது எஞ்சிய சிறைத் தண்டனையை வீட்டுக் காவலில் இருந்தவாறு நிறைவேற்ற அனுமதிக்கப்படுவார்.

“நிபந்தனைகளில் ஏதேனும் ஒன்றை நிறைவேற்றத் தவறினால் நஜிப்பின் நிபந்தனையுடன் கூடிய அனுமதி ரத்தாகி எஞ்சிய காலத்துக்கான தண்டனையை அவர் சிறையில் கழிக்க வேண்டும்,” என்று பிரதமர் அலுவலகத்தின் சட்டத் துறை வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 18) அறிக்கை வெளியிட்டது.

இதற்குமுன் இம்மாதம் 11ஆம் தேதி நடைபெற்ற கூட்டத்தில், வாரியம் இந்த விவகாரத்தை ஒத்திவைப்பதாகக் கூறியது.

மலேசியாவின் பிரதமராக 73 வயது திரு நஜிப், ஒன்பது ஆண்டுகள் பதவி வகித்தார். அவர், 2018ஆம் ஆண்டு ஜூலை மாதம் மலேசியாவின் 1 எம்டிபி வழக்குத் தொடர்பில் கைதுசெய்யப்பட்டார்.

நம்பிக்கை மோசடி, அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தியது போன்ற குற்றச்சாட்டுகள் அவர்மீது சுமத்தப்பட்டன.

கூட்டரசுப் பிரதேசங்களின் மன்னிப்பு வாரியத்துக்கு அப்போது தலைமை வகித்த மாமன்னர் சுல்தான் அப்துல்லா அகமது ‌‌‌ஷா, 2024ஆம் ஆண்டு திரு ரஜிப்பின் சிறைத் தண்டனைக் காலத்தைப் பாதியாகக் குறைத்தார்.

திரு நஜிப்பிற்கு தொடக்கத்தில் விதிக்கப்பட்ட 210 மில்லியன் ரிங்கிட் அபராதமும் 50 மில்லியன் ரிங்கிட்டிற்குக் குறைக்கப்பட்டது.

இந்நிலையில், திரு நஜிப் வீட்டுக் காவலில் இருப்பதற்கான 50 மில்லியன் ரிங்கிட் அபராதத்தைச் செலுத்துவதில் கைகொடுக்க நிதித் திரட்டு ஒன்றை அம்னோ கட்சி அறிமுகம் செய்யவிருப்பதாக அறிவித்துள்ளது.

நிதித் திரட்டுக்குப் பங்களிக்கும்படி கட்சித் தலைவர்கள் உள்பட உறுப்பினர்களுக்கும் ஆதரவாளர்களுக்கும் அம்னோ கட்சித் தலைவர் அகமது ஸாஹிட் ஹமிடி அழைப்புவிடுத்தார்.

திரு நஜிப் தொடர்பில் எடுக்கப்பட்ட முடிவை அம்னோ கட்சி வரவேற்பதாகக் கூறிய திரு ஸாஹிட், சுல்தான் இப்ராகிமிற்குக் கட்சி தமது பாராட்டைத் தெரிவிப்பதாகச் சொன்னார்.

இதற்கிடையே, திரு நஜிப் குறித்த அறிவிப்பு வெளியானவுடன் காஜாங் சிறைச்சாலையிலும் திரு நஜிப்பின் இல்லத்திற்கும் வெளியே செய்தியாளர்களின் கூட்டம் திரண்டது.

காஜாங் சிறைச்சாலைக்கு வெளியே திரண்ட செய்தியாளர் கூட்டம்.
காஜாங் சிறைச்சாலைக்கு வெளியே திரண்ட செய்தியாளர் கூட்டம். - படம்: இபிஏ

சிறைச்சாலைக்கு உள்ளும் புறமும் உள்ள நடமாட்டங்களைக் கட்டுப்படுத்த மலேசியச் சிறைச்சாலைத் துறை அதிகாரிகள் தடுப்புகளை அமைத்துள்ளதாகப் பெர்னாமா தெரிவித்தது.

சிறைச்சாலைக்கு வெளியே கூடிய செய்தியாளர்கள் முக்கிய நுழைவாயிலில் இருந்து கிட்டத்தட்ட 10 மீட்டர் தொலைவில் காத்திருக்கும்படி கூறப்பட்டது.

ஜாலான் லங்காக் டுட்டாவில் உள்ள திரு நஜிப்பின் இல்லத்திற்கு வெளியே 50க்கும் அதிகமான உள்ளூர், வெளிநாட்டு செய்தியாளர்கள் கூறினர்.

ஜாலான் லங்காக் டுட்டாவில் உள்ள திரு நஜிப் ரசாக்கின் இல்லம்.
ஜாலான் லங்காக் டுட்டாவில் உள்ள திரு நஜிப் ரசாக்கின் இல்லம். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

அங்குப் பல்வேறு காவல்துறை வாகனங்களும் காணப்பட்டன.

குறிப்புச் சொற்கள்