கோலாலம்பூர்: மலேசியாவின் முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக், 1எம்டிபி வழக்கில் தனக்கு விதிக்கப்பட்ட தண்டனையை எதிர்த்து மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார்.
திங்கட்கிழமை (டிசம்பர் 29) அன்று மேற்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டதை அவரது வழக்கறிஞர் முகமது ஃபர்ஹான் முகமது ஷஃபி உறுதிப்படுத்தினார்.
அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்திய நான்கு குற்றச்சாட்டுகளிலும், 1எம்டிபி நிதியுடன் தொடர்புடைய 2.28 பில்லியன் ரிங்கிட் சம்பந்தப்பட்ட 21 பணமோசடிக் குற்றச்சாட்டுகளிலும் நஜிப்பை குற்றவாளி என்று உயர் நீதிமன்றம் டிசம்பர் 26 அன்று கண்டறிந்தது. முன்னாள் பிரதமரான திரு நஜிப்புக்கு 15 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் மொத்தம் 11.4 பில்லியன் ரிங்கிட் அபராதமும் விதிக்கப்பட்டது. மேலும் அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டுகளுக்காக 40 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் விதிக்கப்பட்டது.
பணமோசடிக் குற்றச்சாட்டுகளுக்கு அபராதம் எதுவும் விதிக்கப்படவில்லை என்றாலும், மீட்கக்கூடிய 2.081 பில்லியன் ரிங்கிட் தொகையைச் செலுத்தத் தவறினால், அந்தக் குற்றச்சாட்டுகளுக்காக 270 மாதச் சிறைத்தண்டனையை நிறைவேற்ற நீதிமன்றம் அவருக்கு உத்தரவிட்டது.
1எம்டிபி நிதியிலிருந்து 2.28 பில்லியன் ரிங்கிட் பணத்தைத் தனதாக்கிக்கொள்ள தனது பதவியைப் பயன்படுத்தியதாக நஜிப் மீது நான்கு குற்றச்சாட்டுகளும், அதே தொகையை உள்ளடக்கிய 21 பணமோசடிக் குற்றச்சாட்டுகளும் சுமத்தப்பட்டன.
டிசம்பர் 24ஆம் தேதி அன்று, கூடுதல் வழக்கில் தனது நீதித்துறை மறுஆய்வை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்ததை எதிர்த்து நஜிப் மேல்முறையீடு செய்தார். இது வீட்டுக் காவலில் தனது தண்டனையை அனுபவிக்க அனுமதிக்கும் என்று அவர் கூறினார்.
அரசியலமைப்புக் கட்டமைப்பிற்கு வெளியே வெளியிடப்பட்டதால், நீதித்துறை மறுஆய்வை நீதிமன்றம் நிராகரித்து, அது செல்லாது என்றும் செயல்படுத்த முடியாதது என்றும் தீர்ப்பளித்தது என்று தி ஸ்டார் செய்தி கூறியது.

