வீட்டுக்காவல் மறுப்புக்கு எதிராக நஜிப் மேல்முறையீடு

1 mins read
66c6f354-c496-41e5-9088-e263b2db5b7f
முன்னாள் மலேசியப் பிரதமர் நஜிப் ரசாக். - கோப்புப் படம்: ராய்ட்டர்ஸ்

கோலாலம்பூர்: தமக்கு விதிக்கப்பட்ட சிறைத் தண்டனையின் எஞ்சிய காலத்தை வீட்டுக்காவல்வழி நிறைவேற்ற முன்னாள் மலேசியப் பிரதமர் நஜிப் ரசாக்கின் விண்ணப்பத்தை அந்நாட்டு உயர் நீதிமன்றம் நிராகரித்திருந்தது.

அதற்கு எதிராக மேல்முறையீடு செய்யப்பட்டிருப்பதை அவரின் வழக்கறிஞர் முகம்மது ஃபர்ஹான் முகம்மது ‌ஷஃபீ உறுதிப்படுத்தியுள்ளார். கடந்த புதன்கிழமை (டிசம்பர் 24) நஜிப் மேல்முறையீட்டு மனுவைத் தாக்கல் செய்ததாக அவரின் வழக்கறிஞர் மலாய் மெயில் ஊடகத்திடம் திங்கட்கிழமை (டிசம்பர் 29) தெரிவித்தார்.

நஜிப்பை வீட்டுக்காவலில் வைப்பது செல்லுபடியாகாத ஒன்று என்றும் அதை நிறைவேற்ற முடியாது என்றும் நீதிமன்றம் கடந்த திங்கட்கிழமை (டிசம்பர் 22) தீர்ப்பளித்தது.

கடந்த 2022ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்திலிருந்து நஜிப், காஜாங் சிறையில் தண்டனையை நிறைவேற்றி வருகிறார். எஸ்ஆர்சி இன்டர்நேஷனல் சென்டரியான் பெர்ஹாத் நிறுவனத்திலிருந்து 42 மில்லியன் ரிங்கிட் (13.12 மில்லியன் வெள்ளி) தொகையைக் கையாடல் செய்ததன் தொடர்பில் அவர் சிறைத் தண்டனையை நிறைவேற்றி வருகிறார்.

நஜிப், இவ்வழக்கில் 50 மில்லியன் ரிங்கிட் அபராதம் செலுத்தவேண்டும் என்றும் தீர்ப்பளிக்கப்பட்டிருந்தது. அந்த அபராதத்தை அவர் செலுத்துவதைப் பொறுத்து சிறைத் தண்டனை 2028ஆம் ஆண்டு ஆகஸ்ட் அல்லது 2029ஆம் ஆண்டு ஆகஸ்ட்டில் நிறைவடையும்.

குறிப்புச் சொற்கள்