கோலாலம்பூர்: மலேசியாவின் முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக், தமது மூன்று ஆண்டு சிறைவாசம் பற்றிய உணர்வுபூர்வமான கவிதை ஒன்றை சனிக்கிழமை (ஆகஸ்ட் 23) ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
அதிகாலைத் தொழுகைக்கான அழைப்பு, சிறைச்சாலைச் சுவர்களுக்குள் ஒலிப்பதாகத் தொடங்கும் அந்தக் கவிதை, அவரது சிறைவாசம் குறித்த சோகமான மனநிலையுடன் தொடங்குகிறது.
சிறையில், தொழுகை மூலம் மனது இதமடைந்ததாகவும் ஆறுதல் பெற்றதாகவும் நஜிப் குறிப்பிட்டுள்ளார்.
சட்டச் சிக்கல்களைச் சமாளித்து வந்த நேரத்தில் தமக்கு ஏற்பட்ட விரக்தியையும் கவிதை மூலம் திரு நஜிப் வெளிப்படுத்தினார்.
எஸ்.ஆர்.சி இன்டர்நேஷனல் (SRC International) வழக்கில் நஜிப்புக்குச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டு, அவர் சிறையில் அடைக்கப்பட்ட மூன்றாம் ஆண்டு நிறைவை இந்தக் கவிதை குறிக்கிறது
நாட்டின் மிகப்பெரிய நிதி மோசடி வழக்கான 1எம்டிபி நிறுவனத்தின் ஊழலுடன் தொடர்புடைய பல்வேறு குற்றச்சாட்டுகளுக்காகத் திரு நஜிப் 2018ல் கைது செய்யப்பட்டார்.
2020ஆம் ஆண்டு ஜூலை 28ஆம் தேதி, எஸ்.ஆர்.சி இன்டர்நேஷனல் நிறுவனத்திலிருந்து 42 மில்லியன் ரிங்கிட் அரசுப் பணம் அவரது தனிப்பட்ட வங்கிக் கணக்கிற்கு மாற்றப்பட்டது. மலேசிய நீதிமன்றம், அவருக்கு 12 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்தது.
2022ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம், இந்த வழக்கின் உச்ச நீதிமன்ற மேல்முறையீட்டு மனுவும் நிராகரிக்கப்பட்டதை அடுத்து நஜிப் உடனடியாக சிறையில் அடைக்கப்பட்டார். மலேசியாவின் முன்னாள் பிரதமராக இருந்த ஒருவர் சிறைக்குச் செல்வது இதுவே முதன்முறை.