புத்ராஜெயா: ஊழல் குற்றம் புரிந்ததற்காக மலேசியாவின் முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக்கிற்கு 12 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
அதன் பிறகு அவருக்கு அரச மன்னிப்பு வழங்கப்பட்டு தண்டனைக்காலம் பாதியாகக் குறைக்கப்பட்டது.
காஜாங் சிறையில் அடைக்கப்பட்டுள்ள 71 வயது நஜிப், எஞ்சியுள்ள தண்டனைக்காலத்தை வீட்டுக்காவலில் இருந்தவாறு அனுபவிக்க மேல்முறையீடு செய்யத் திட்டமிட்டுள்ளார்.
இதுதொடர்பாக, அவருக்கு திங்கட்கிழமையன்று (ஜனவரி 6) பச்சைக்கொடி காட்டப்பட்டது.
அவரை வீட்டுக்காவலில் வைத்திருக்க அரச ஆணை ஒன்று பிறப்பிக்கப்பட்டுள்ளதை நிரூபிக்கும் வகையில் பாகாங் அரண்மனையிலிருந்து கடிதம் ஒன்று நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.
மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் மூன்று நீதிபதிகளைக் கொண்ட அமர்வு இந்த வழக்கை விசாரித்தனர்.
அந்த மூன்று நீதிபதிகளில் இருவர் நஜிப்பின் மனுவை ஏற்றுக்கொண்டனர்.
நஜிப்பின் வீட்டுக்காவல் தொடர்பான மேல்முறையீட்டை விசாரிக்க வேண்டும் என்று கோலாலம்பூர் உயர் நீதிமன்றத்துக்கு உத்தரவிடப்பட்டது.
தொடர்புடைய செய்திகள்
வீட்டுக்காவல் தொடர்பான மேல்முறையீட்டை விசாரிப்பது தொடர்பாக நஜிப் சமர்ப்பித்திருந்த மனுவை 2024ஆம் ஆண்டு ஜூலை மாதம் கீழ் நீதிமன்றம் நிராகரித்தது குறிப்பிடத்தக்கது.
நஜிப்பை வீட்டுக்காவலில் வைத்திருக்க 2024ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 29ஆம் தேதியன்று அரச ஆணை பிறக்கப்பட்டதை மலேசிய அரசாங்கம் எதிர்க்கவில்லை என்று நீதிபதி முகம்மது ஃபிருஸ் ஜஃப்ரில் சுட்டினார்.
அரச ஆணையை நீதிமன்றம் புறக்கணிக்க முடியாது என்றார் அவர்.
2024ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 29ஆம் தேதியன்று அப்போதைய மாமன்னராக இருந்த பாகாங் சுல்தான் அப்துல்லா அகமது ஷா நஜிப்புக்கு மன்னிப்பு வழங்கி அவரது தண்டனைக் காலத்தைப் பாதியாகக் குறைத்தார்.
அதுமட்டுமல்லாது, நஜிப்புக்கு விதிக்கப்பட்டிருந்த 210 மில்லியன் ரிங்கிட் (S$63.8 மில்லியன்) அபராதத்தை 50 மில்லியன் ரிங்கிட்டாகக் குறைத்தார்.