15 ஆண்டு சிறைத் தண்டனையை நிறுத்தும்படி கோரும் நஜிப் ரசாக்

15 ஆண்டு சிறைத் தண்டனையை நிறுத்தும்படி கோரும் நஜிப் ரசாக்

படம்: பெரித்தா ஹரியான்

25 Sep 2026 - 3:27 pm

2 mins read

கோலாலம்பூர்: மலேசியாவின் முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக், பல பில்லியன் டாலர் மதிப்பிலான ஊழல் வழக்குத் தொடர்பில் தமக்கு விதிக்கப்பட்ட 15 ஆண்டுகால சிறைத் தண்டையை நிறுத்திவைக்கும்படி நீதிமன்றத்திடம் கேட்டுக்கொண்டுள்ளார்.

அரச மன்னிப்பைப் பெற்று ஒரு வாரம் ஆகியுள்ள நிலையில் திரு நஜிப் தமது கோரிக்கையை முன்வைத்துள்ளார்.

மலேசியாவின் 1எம்டிபியிலிருந்து களவாடப்பட்ட பில்லியன்கணக்கான டாலர் குறித்த வழக்குத் தொடர்பில் ஊழல், கள்ளப் பணத்தை நல்ல பணமாக்கியது ஆகிய குற்றச்சாட்டுகளை 73 வயது திரு நஜிப் எதிர்கொண்டார்.

2022ஆம் ஆண்டிலிருந்து சிறைத் தண்டனையை நிறைவேற்றிவரும் அவர், குற்றம் புரியவில்லை என்று தொடர்ந்து கூறிவருகிறார்.

இந்நிலையில் மலேசியாவின் மாமன்னர் சுல்தான் இப்ராகிம் கடந்த வாரம் நிபந்தனையுடன் கூடிய மன்னிப்பைத் திரு நஜிப்பிற்கு வழங்கினார்.

2028ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் திரு நஜிப் விடுதலை பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எஞ்சிய தண்டனைக் காலத்தை வீட்டிலிருந்து நிறைவேற்ற திரு நஜிப் 50 மில்லியன் ரிங்கிட்டை அபராதமாகச் செலுத்தவேண்டும் என்று உத்தரவிடப்பட்டது.

ஆனால், 1எம்டிபி தொடர்பான வேறோர் ஊழல் வழக்கில் திரு நஜிப் குற்றவாளி என்று கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கண்டறியப்பட்டதை அடுத்து அவருக்குக் கூடுதலாக 15 ஆண்டுகால சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

அவரது வீட்டுக் காவல் முடிவடைந்தவுடன் 15 ஆண்டு சிறைத் தண்டனை காலம் தொடங்கும். அந்தத் தண்டனையை நிறுத்திவைக்கும்படி திரு நஜிப் முன்வைத்த கோரிக்கை குறித்து கோலாலம்பூர் உயர் நீதிமன்றம் அக்டோபர் 14ஆம் தேதி முடிவெடுக்கும் என்று நஜிப்பின் வழக்கறிஞர் முகமது ‌‌ஷஃபீ அப்துல்லா செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

திரு நஜிப் அபராதத்தைச் செலுத்திவிட்டால் அதே நாளில் அவர் சிறையிலிருந்து வெளியேறுவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்றார் அவர்.

திரு நஜிப்பின் கோரிக்கை தொடர்பில் கோலாலம்பூர் உயர் நீதிமன்றம் முடிவெடுக்கும் என்றார் அவரது வழக்கறிஞர் முகமது ‌‌ஷஃபீ அப்துல்லா. 
திரு நஜிப்பின் கோரிக்கை தொடர்பில் கோலாலம்பூர் உயர் நீதிமன்றம் முடிவெடுக்கும் என்றார் அவரது வழக்கறிஞர் முகமது ‌‌ஷஃபீ அப்துல்லா.  - படம்: இபிஏ

திரு நஜிப்பின் சொத்துகள் அரசாங்கத்தால் முடக்கப்பட்டிருப்பதால், அபராதத்தை அவரால் இதுவரை செலுத்த முடியாமல் இருக்கிறது என்றார் ‌‌ஷஃபீ.

குறிப்புச் சொற்கள்