கோலாலம்பூர்: முன்னாள் மலேசியப் பிரதமர் நஜிப் ரசாக், 2.28 பில்லியன் ரிங்கிட் (690 மில்லியன் வெள்ளி) மதிப்பிலான 1எம்டிபி வழக்கு விசாரணையில் பிரதிவாதி தரப்பின் முதல் சாட்சியாக திங்கட்கிழமையன்று (டிசம்பர் 2) உயர் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.
நஜிப், 525 பக்கங்களைக் கொண்ட தனது சாட்சி வாக்குமூலத்தை வாசிக்க வேண்டுகோள் விடுத்திருப்பதாக அவரைப் பிரதிநிதிக்கும் முக்கிய வழக்கறிஞரான ஷாஃபி அப்துல்லா, நீதிபதி கொலின் செக்குவேராவிடம் கூறினார். அதிக பக்கங்கள் இருப்பதால் அந்த வாக்குமூலம் இரண்டு பாகங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளதெனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சாட்சி வாக்குமூலம் நீதிமன்றத்தில் வாசிக்கப்படலாம். அதேவேளை, அது ஏற்கெனவே வாசிக்கப்பட்டுவிட்டதாகவும் கருத்தில்கொள்ளலாம்.
ஒரு மாதத்துக்குள் சாட்சி வாக்குமூலத்தைத் தயார் செய்யவேண்டிய சவாலை நஜிப்பின் வழக்கறிஞர்கள் எதிர்கொண்டதாக திரு ஷாஃபி சொன்னார். பிரதிவாதி தரப்பு தனது வாதத்தைத் தயார்செய்யுமாறு உயர் நீதிமன்றம் கடந்த அக்டோபர் மாதம் 30ஆம் தேதி உத்தரவிட்டதைத் தொடர்ந்து அத்தகைய சூழல் உருவானதாக அவர் குறிப்பிட்டார்.
சிறையிலிருந்தபடி நஜிப் தனது வழக்கறிஞர்க் குழுவிடம் என்ன செய்ய வேண்டும் என்ற ஆலோசனை வழங்கியதாக திரு ஷாஃபி கூறினார். நஜிப் படிப்பதற்கென சில ஆவணங்கள் அவரிடமே ஒப்படைக்கப்பட்டதாகவும் திரு ஷாஃபி தெரிவித்தார்.
நஜிப்புக்காக வாதிடும் வழக்கறிஞர்க் குழு, நன்கு செயல்பட்டிருப்பதாக நீதிபதி செக்குவேரா பாராட்டினார். அதேவேளை, சாட்சி வாக்குமூலத்தை வேகமாக வாசிக்குமாறும் அவர் நஜிப்பைக் கேட்டுக்கொண்டார்.