கோலாலம்பூர்: மலேசியாவில் 1எம்டிபி நிதி மோசடி வழக்கில் 15 ஆண்டுச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள மலேசியாவின் முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக், சுதந்திரத்திற்கான போராட்டத்தில் தனிமையாக இருப்பதைபோல் உணர்வதாகக் கூறியுள்ளார்.
1எம்டிபி நிதி மோசடி வழக்கில் நஜிப், குற்றவாளி என்று மலேசிய உயர் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை (டிசம்பர் 26) தீர்ப்பளித்தது. இதற்கிடையே, தீர்ப்புகுறித்து கருத்துரைத்த நஜிப், சட்டப்பூர்வ வழிகள் வாயிலாகத் தனது உரிமைகளைத் தொடர்ந்து கோரப்போவதாகக் கூறியுள்ளார்.
“இந்தப் பாதை தனிமையானது. இதில் செல்வதற்கு பெரும் தியாகம் தேவைப்பட்டாலும், கண்ணியத்துடனும் பொறுமையுடனும் சட்டப்பூர்வ வழிகளில் உரிமைகளைக் பெற முயல்வேன்,” என்று கூறினார்.
முன்னாள் நிதியமைச்சருமான நஜிப்பின் அறிக்கையை வெள்ளிக்கிழமை (டிசம்பர் 26) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின்போது அவரது வழக்கறிஞர் முகமது ஷஃபி அப்துல்லா வாசித்தார்.
மேலும் தற்போது வந்துள்ள தீர்ப்பு குறித்து பேசிய வழக்கறிஞர், அந்த முடிவைப் பொருட்படுத்தாமல், நாட்டின் நீதித்துறை செயல்பாட்டில் நம்பிக்கையுடன் இருப்பதாகக் கூறினார்.
அதே அறிக்கையில், நஜிப் பொதுமக்களை அமைதியாக இருக்கவும், நல்லிணக்கத்தைப் பாதிக்கும் மற்றும் சட்ட செயல்முறையை அவமதிக்கும் எந்தவொரு வன்செயலுக்கும் ஆளாகாமல் இருக்கவும் அழைப்பு விடுத்தார்.
“அனைத்து மலேசியர்களும் அமைதியாகவும், பகுத்தறிவுடனும், விவேகத்துடனும் இருக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.
‘‘முதிர்ச்சியடைந்த, சட்டபூர்வமான முறையில் கருத்து வேறுபாடுகள் வெளிப்படுத்தப்பட வேண்டும்,” என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
தொடர்புடைய செய்திகள்
1எம்டிபியின் 2.3 பில்லியன் ரிங்கிட் நிதியை (S$727 மில்லியன்) முறைகேடாகப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் நீண்டகால வழக்கு தற்போது இறுதிகட்டத்தை எட்டியது.
இவ்வழக்கில் திரு நஜிப் மொத்தம் 25 குற்றச்சாட்டுகளை எதிர்நோக்கினார். அவற்றில் 21 குற்றச்சாட்டுகள் பண மோசடி தொடர்பானவை. நான்கு குற்றச்சாட்டுகள், அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தியது தொடர்பானவை. அனைத்துக் குற்றச்சாட்டுகளிலும் அவர் குற்றவாளி என தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

