தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

வீட்டுக்காவல்: நஜிப்பின் மேல்முறையீட்டு மனு மீது ஜனவரி 6ல் விசாரணை

1 mins read
5b4644fa-f8d9-4723-9cfa-8cdf89cc7907
முன்னாள் மலேசியப் பிரதமர் நஜிப் ரசாக். - கோப்புப் படம்: ஏஎஃப்பி

கோலாலம்பூர்: சிறைக் காவலுக்குப் பதில் தம்மை வீட்டுக்காவலில் வைக்கக் கோரி முன்னாள் மலேசியப் பிரதமர் நஜிப் ரசாக் தாக்கல் செய்துள்ள மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை 2025 ஜனவரி 6ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

மலேசியாவின் தலைமைச் சட்ட அதிகாரி அலுவலகம் திங்கட்கிழமை (டிசம்பர் 9) அந்த அறிவிப்பை வெளியிட்டது.

சிறைத் தண்டனையின் எஞ்சிய காலத்தை வீட்டுக் காவலில் கழிக்க மலேசியாவின் முன்னாள் மாமன்னர் தமக்கு அனுமதி அளித்திருந்ததாகவும் அதன் அடிப்படையில் தாம் அனுபவித்து வரும் தண்டனையை மறு ஆய்வு செய்யுமாறும் நஜிப் இதற்கு முன்னர் மனு அளித்து இருந்தார்.

அந்த மனுவை கடந்த ஜூலை 3ஆம் தேதி உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

அதனை எதிர்த்து நஜிப் மேல்முறையீடு செய்துள்ளார்.

மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை நடைபெறும் தேதி உறுதி செய்யப்பட்டுள்ளதால், நீதிமன்ற நடைமுறைகளுக்கு அனைத்துத் தரப்பினரும் மதிப்பளிக்குமாறு தலைமைச் சட்ட அதிகாரி அலுவலகம் கேட்டுக்கொண்டு உள்ளது.

நீதிமன்றம் இன்னும் எதுவும் முடிவு செய்யாததால் அந்த வழக்கு தொடர்பாக அறிக்கை எதுவும் வெளியிட வேண்டாம் என்றும் அது தெரிவித்துள்ளது.

குறிப்புச் சொற்கள்