வீட்டுக்காவலுக்கு மாற்ற நஜிப் விடுத்த கோரிக்கை: நிராகரித்த மலேசிய நீதிமன்றம்

2 mins read
4b42843a-cbdb-4b05-8422-843c735e598f
மலேசியாவின் முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக், 1எம்டிபி ஊழலின் தொடர்பில் 2022ஆம் ஆண்டிலிருந்து சிறையில் இருக்கிறார். - படம்: ஏஎஃப்பி

கோலாலம்பூர்: மலேசியாவின் முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக், அவரின் எஞ்சிய சிறைவாசத்தை இல்லத்தில் கழிப்பதற்கு விடுத்த கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது. மலேசிய நீதிமன்றம் ஒன்று அவரின் கோரிக்கையைத் திங்கட்கிழமை (டிசம்பர் 22) நிராகரித்தது.

வீட்டுக்காவலுக்கு மாற்ற வழிவிடும் அரச உத்தரவு சரியான நடைமுறைகளின்படி பிறப்பிக்கப்படவில்லை என்று நீதிமன்றம் சொன்னது.

பல பில்லியன் டாலர் பெறுமான 1எம்டிபி ஊழலின் தொடர்பில் 2022ஆம் ஆண்டிலிருந்து சிலாங்கூரின் காஜாங் சிறையில் இருக்கிறார் நஜிப். நீதிமன்றத்தின் அண்மை முடிவின்படி எஞ்சிய சிறைவாசத்தை அவர் அங்குக் கழிக்கவேண்டியிருக்கும்.

நஜிபிற்கு 12 ஆண்டுச் சிறைத்தண்டனையுடன் 210 மில்லியன் ரிங்கிட் அபராதமும் விதிக்கப்பட்டது. ஆனால் மலேசியாவின் முன்னாள் மாமன்னர் சுல்தான் அப்துல்லா ரியாயாதுடின் அல்-முஸ்தஃபா பில்லா ‌ஷா, சிறைத்தண்டனையை ஆறாண்டாகவும் அபராதத் தொகையை 50 மில்லியன் ரிங்கிட்டாகவும் குறைத்தார்.

ஆனால் சிறைத்தண்டனையை வீட்டுக் காவலுக்கு மாற்றுவதாகக் கூறிய பிற்சேர்க்கை உத்தரவை முன்னாள் மாமன்னர் வெளியிட்டதாக நஜிப் கூறுகிறார். அந்த ஆவணத்தை அரசாங்கம் உறுதிப்படுத்தி, அதில் குறிப்பிடப்பட்டுள்ள அம்சங்களை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்தார்.

பொதுமன்னிப்பு வாரிய உறுப்பினர்கள் உள்ளிட்ட அரசாங்க அதிகாரிகள் அத்தகைய ஆவணம் இருப்பதாகத் தங்களுக்குத் தெரியவில்லை என்று மாதக் கணக்கில் கூறிவருகின்றனர். ஆனால் அரசு ஆவணம் வெளியிடப்பட்டதை முன்னாள் மன்னரின் அலுவலகத்தினரும் வழக்கறிஞர் ஒருவரும் உறுதிப்படுத்தினர்.

அரசமைப்புச் சட்டத்தின்படி, அத்தகைய உத்தரவு நாட்டின் பொதுமன்னிப்பு வாரியத்துடன் கலந்தாலோசிக்கப்பட வேண்டும் என்று கோலாலம்பூர் உயர்நீதிமன்றம் குறிப்பிட்டது. நஜிப் தொடர்பான ஆவணம் பற்றி வாரியத்துடன் கலந்தாலோசிக்கப்படாததால் சட்டபூர்வமாக அதனை நடைமுறைப்படுத்த முடியாது என்று நீதிமன்றம் கூறியது.

மலேசிய மாமன்னர்கள், பொதுமன்னிப்பு வழங்கலாம் என்றாலும்கூட அவர்களின் அதிகாரத்துக்கு வரம்புண்டு என்று நீதிபதி அலிஸ் லோக் கூறினார்.

“பிற்சேர்க்கை உத்தரவு பற்றிப் பொதுமன்னிப்பு வாரியத்தில் பேசப்படவில்லை. அதனால் அந்த உத்தரவு செல்லுபடியாகாது,” என்றார் அவர்.

நஜிப் எதிர்நோக்கும் ஆகப் பெரிய வழக்கின் தீர்ப்பை இன்னொரு நீதிமன்றம் இம்மாதம் 26ஆம் தேதி வெளியிடவிருக்கிறது. 1எம்டிபியிலிருந்து சட்ட விரோதமாக 2.2 மில்லியன் ரிங்கிட் (S$698 million) மாற்றப்பட்டதன் தொடர்பில் நஜிப் மீது கூடுதலாக 4 ஊழல் குற்றச்சாட்டுகளும் கள்ளப் பணத்தை நல்ல பணமாக்க முயன்றதாக 21 குற்றச்சாட்டுகளும் சுமத்தப்பட்டன.

ஆனால், தாம் ஓர் அப்பாவி என்று தொடர்ந்து கூறிவருகிறார் நஜிப்.

குற்றம் நிரூபிக்கப்பட்டால், அவருக்கு அதிகபட்சம் 20 ஆண்டுச் சிறைத்தண்டனை விதிக்கப்படக்கூடும். அத்துடன் சம்பந்தப்பட்ட தொகையைப் போன்று ஐந்து மடங்கு அபராதத்தையும் அவர் செலுத்தவேண்டியிருக்கும்.

குறிப்புச் சொற்கள்