தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

சுமந்திரனைச் சந்தித்த இலங்கை அதிபர் தேர்தல் வேட்பாளர் நாமல் ராஜபக்சே

2 mins read
வடக்கு, கிழக்கு மாநிலங்களின் முன்னேற்றத்திற்காக இணைந்து செயல்பட தயார் என்கிறார்
a1a053f4-3e4d-4a2e-adfb-79f358d714af
(இடமிருந்து) சுமந்திரன் எம்.பி., இலங்கை அதிபர் தேர்தல் வேட்பாளர் நாமல் ராஜபக்சே, இலங்கை பொதுஜன பெரமுன் கட்சியின் பொதுச் செயலாளர் சாகர கரியவாசம். - படம்: இலங்கை ஊடகம்

கொழும்பு: இலங்கை பொதுஜன பெரமுன கட்சி சார்பில் இலங்கை அதிபர் தேர்தல் வேட்பாளராகப் போட்டியிடும் நாமல் ராஜபக்சே சனிக்கிழமையன்று (ஆகஸ்ட் 10) தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எம்.பி. சுமந்திரனைக் கொழும்பிலுள்ள அவரது இல்லத்தில் சந்தித்துப் பேசினார்.

அப்போது, இலங்கையின் வடக்கு, கிழக்கு மாநிலங்கள் எதிர்கொண்டு வரும் பிரச்சினைகள் குறித்தும் செப்டம்பர் 21 அதிபர் தேர்தலில் நாமல் வெற்றிபெற்றால் மேற்கொள்ளப்பட வேண்டிய வளர்ச்சிப் பணிகள் குறித்தும் அவர்கள் கலந்துரையாடியதாகக் கூறப்பட்டது.

இலங்கை பொதுஜன பெரமுன கட்சியின் கொள்கை உருவாக்கக் குழு உறுப்பினர் கீதநாத் காசிலிங்கம் இதனைத் தெரிவித்ததாக ‘டெய்லி மிரர்’ ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

வடக்கு, கிழக்கு மாநில மக்களின் குறைகளுக்குத் தீர்வுகாணவும், வாழ்வாதாரத்திற்கும், அவ்வட்டார இளையர்களின் மேம்பட்ட எதிர்காலத்திற்கும் தமிழ் எம்.பி.க்களுடன் இணைந்து பணியாற்ற தான் தயாராய் இருப்பதாக சுமந்திரனிடம் நாமல் சொன்னதாக காசிலிங்கம் தெரிவித்தார்.

அதிபர் தேர்தலில் தான் வெற்றிபெற்றாலும் பெறாவிட்டாலும், வடக்கு, கிழக்கு மாநிலவாழ் மக்களின் சிறந்த எதிர்காலத்தை உறுதிப்படுத்த தான் விரும்புவதாக நாமல் கூறினார்.

அத்துடன், அவ்விரு பகுதிகளையும் அனைத்துலக வணிக நடுவங்களாக உருமாற்ற தான் எண்ணம் கொண்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

வடக்கு, கிழக்கு மாநில மக்களின் குறைகள் குறித்து விரிவாகப் பேசும் வகையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எம்.பி.க்கள் அனைவரையும் சந்திக்க ஏற்பாடு செய்யுமாறும் நாமல் கேட்டுக்கொண்டதாக காசிலிங்கம் சொன்னார்.

அதற்கு, நாமல் முன்வைத்த கோரிக்கைகளை ஞாயிற்றுக்கிழமை நடக்கவிருக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மத்தியக் குழுக் கூட்டத்தில் முன்வைப்பதாக சுமந்திரன் பதிலளித்ததாகவும் வடக்கு, கிழக்க மாநில மக்களுக்காக நாமல் எடுக்கும் முயற்சிகளை அவர் பாராட்டியதாகவும் காசிலிங்கம் கூறினார்.

குறிப்புச் சொற்கள்