கோலாலம்பூர்: மலேசிய அமைச்சரவையில் பெரிய மாற்றம் எதுவும் செய்யப்படாது என்றும் காலியிடங்கள் மட்டும் நிரப்பப்படும் என்றும் பிரதமர் அன்வார் இப்ராகிம் தெரிவித்துள்ளார்.
தற்போதைய அமைச்சரவையின் ஆயுட்காலம் ஏறத்தாழ ஈராண்டுகளே உள்ளதால் அதில் பெரிய அளவில் மாற்றத்திற்கு வாய்ப்பில்லை என்றார் அவர்.
இதுகுறித்து திரு அன்வார் திங்கட்கிழமை (டிசம்பர் 1) செய்தியாளர்களிடம் பேசினார்.
“அமைச்சரவையில் பெரிய மாற்றம் செய்வதற்கான அவசியம் எதுவும் ஏற்படவில்லை. என்ன செய்ய வேண்டும் என்பது பற்றி இன்னும் ஆராய்ந்து வருகிறேன். இருப்பினும், அமைச்சரவையில் ஏற்பட்டுள்ள காலியிடங்களை நிரப்புவது அவசியம்,” என்றார் அவர்.
தற்போதைய மலேசிய அமைச்சரவையில் நான்கு இடங்கள் காலியாக உள்ளன.
முதலீடு மற்றும் வர்த்தக-தொழில், பொருளியல், இயற்கை வளம் மற்றும் சுற்றுச்சூழல் நீடித்த நிலைத்தன்மை, நிறுவன மேம்பாடு மற்றும் கூட்டுறவு ஆகியன காலியாக உள்ள துறைகள்.
பொருளியல் அமைச்சர் பதவியில் இருந்து ரஃபிஸி ரம்லியும் இயற்கை வளம் மற்றும் சுற்றுச்சூழல் நீடித்த நிலைத்தன்மை அமைச்சர் பதவியில் இருந்து நிக் நஸிம் நிக் அகமதுவும் கடந்த மே மாதம் விலகினர்.
பிகேஆர் கட்சித் தேர்தலில் தோல்வி அடைந்ததால் அவர்கள் தங்களது அமைச்சர் பதவியைத் துறக்க நேரிட்டது.
தொடர்புடைய செய்திகள்
நிறுவன மேம்பாடு மற்றும் கூட்டுறவுத் துறை அமைச்சர் நவம்பர் மாதத் தொடக்கத்தில் விலகினார்.
அதேபோல, முதலீடு, வர்த்தக-தொழில் அமைச்சராக உள்ள துங்கு ஸஃப்ருல் அப்துல் அஸிசின் நாடாளுமன்ற மேலவை உறுப்பினர் பதவி டிசம்பர் 3ஆம் தேதியுடன் முடிவடைவதால் அவரது அமைச்சரவை இடம் காலியாகிறது.
மலேசிய நாடாளுமன்ற மேலவை உறுப்பினர் பதவி உள்ள ஒருவருக்கு இருமுறைக்கு மேல் நீட்டிப்பு வழங்க சட்டத்தில் இடமில்லை. திரு ஸஃப்ருலுக்கு இருமுறை நீட்டிப்பு வழங்கப்பட்டுவிட்டது.
இருப்பினும், அவர் நிறைவேற்ற வேண்டிய பொறுப்புகள் இன்னும் இருப்பதாக திரு அன்வார் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், காலியாக உள்ள அமைச்சரவைப் பொறுப்புகளில் யார் யார் எல்லாம் நியமிக்கப்படக்கூடும் என்னும் ஊகச்செய்தி இணையத்தில் வலம் வருகிறது.
தற்போதைய தோட்டம் மற்றும் வர்த்தகப் பொருள் அமைச்சர் ஜொஹாரி அப்துல் கனிக்கு வேறு துறை ஒதுக்கப்படலாம். முதலீடு, வர்த்தக-தொழில் அமைச்சர் பொறுப்பில் அவர் அமரக்கூடும் என்று கூறப்படுகிறது.
அதேபோல, பிகேஆர் துணைத் தலைவர் ஆர். ரமணன், முன்னாள் சுகாதார அமைச்சர் கைரி ஜமாலுதீன் ஆகியோர் அமைச்சரவையில் சேர்க்கப்படலாம் என ‘த ஸ்டார்’ இணையச் செய்தி தெரிவித்துள்ளது.
இவர்களோடு இன்னும் சில தலைவர்களின் பெயர்களும் அமைச்சர் பதவிக்கு அடிபடுகின்றன.

