வாஷிங்டன்: அமெரிக்க வரலாற்றில் நாடாளுமன்ற நாயகராகப் பதவி வகித்த முதல் பெண்ணான திருமதி நான்சி பெலோசி, ஓய்வுபெறப்போவதாக அறிவித்திருக்கிறார்.
அவருக்கு வயது 85. நாடாளுமன்றத்தில் பல்லாண்டு பணியாற்றிய திருமதி பெலோசி, கலிபோர்னியாவைச் சேர்ந்தவர். ஜனநாயகக் கட்சி உறுப்பினரான அவர், அமெரிக்க அரசியலில் மிகவும் சக்தி வாய்ந்தவர்களுள் ஒருவராகக் கருதப்படுகிறார்.
2027ஆம் ஆண்டு ஜனவரியில் திருமதி பெலோசியின் பதவிக்காலம் முடிவுக்கு வருகிறது. அதன் பின்னர் நாடாளுமன்றத்திற்குப் போட்டியிடப்போவதில்லை என்று வியாழக்கிழமை (நவம்பர் 6) வெளியிட்ட காணொளியில் அவர் தெரிவித்தார்.
திருமதி பெலோசி, முதன்முதலில் சான் பிரான்சிஸ்கோவைப் பிரதிநிதித்து 1987ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தில் அடியெடுத்து வைத்தார். அப்போது அவருக்கு வயது 47. அதன் பின்னர் குறுகிய காலத்தில் அவர் முன்னேறினார்.
2007ல் கட்சி அவரை மன்ற நாயகராகத் தேர்ந்தெடுத்தது. அதன் மூலம் அமெரிக்காவின் முதல் பெண் நாடாளுமன்ற நாயகர் எனும் பெருமையை அவர் பெற்றார். 2011 வரை அவர் அந்தப் பொறுப்பில் நீடித்தார். அப்போது கீழவையின் கட்டுப்பாட்டை ஜனநாயகக் கட்சி இழந்தது. பின்னர் 2019 முதல் 2023 வரை மீண்டும் நாயகராகப் பணியாற்றினார் திருமதி பெலோசி.
அமெரிக்க அரசமைப்புச் சட்டத்தின்படி துணையதிபருக்கு அடுத்து, அதிபராகும் நிலையில் இருப்பவர் நாடாளுமன்ற நாயகர்.
அத்தகைய முக்கியப் பணியில் திருமதி பெலோசி, அதிபர்கள் பலரின் கொள்கைகளை நிறைவேற்றுவதில் அல்லது முறியடியப்பதில் முனைப்புடன் செயல்பட்டுள்ளார்.
2003 முதல் 2023 வரை நாடாளுமன்றத்தின் கீழவையில் கட்சியை வழிநடத்தியிருக்கிறார்.
தொடர்புடைய செய்திகள்
“வரலாறு படைத்திருக்கிறோம், முன்னேறியிருக்கிறோம்,” என்றார் திருமதி பெலோசி.
“நாம் வழிகாட்டியாக இருந்திருக்கிறோம். அனைவரும் நமது ஜனநாயகத்தில் முழுமையாகப் பங்கெடுத்து அதனைத் தொடர வேண்டும். நாம் பெரிதும் மதிக்கும் அமெரிக்க இலட்சியங்களுக்காகத் தொடர்ந்து போராட வேண்டும்,” என்று அவர் சொன்னார்.


