பூமியைப் படம்பிடித்த நாசா விண்வெளி வீரர்கள்

பூமியைப் படம்பிடித்த நாசா விண்வெளி வீரர்கள்

2 mins read
65c760f9-83a0-4821-a034-de8c5998c76d
ஓரியன் விண்கலத்தை ஏந்தி விண்ணில் பாய்ந்த ஏவுகணை. விண்கலத்தில் நான்கு விண்வெளி வீரர்கள் இருக்கின்றனர். - படம்: நாசா

ஓர்லாண்டோ: ஆர்டெமிஸ் 2 விண்கலத்தில் ஏப்ரல் 2ஆம் தேதி நிலவை நோக்கிப் புறப்பட்ட நாசா விண்வெளி வீரர்கள் தற்போது பூமியைச் சுற்றி வருகின்றனர்.

முதல் நாள் முடிவில் அவர்கள் கேமராவை பரிசோதனை செய்வதில் ஈடுபட்டனர். நிலவை நோக்கிப் புறப்படுவதற்கு முன்பு தங்களுக்குக்கீழ் மெதுவாக மறையும் பூமியை படம்பிடிக்க அவர்கள் திட்டமிட்டுள்ளனர்.

“வீட்டின் பின்புறம் வழியாக வெளியே நடந்து செல்வது போன்ற காட்சி,” என்று கமாண்டர் ரீட் வைஸ்மேன், ஹுயுஸ்டன் தலைமைக் கட்டுப்பாட்டு நிலையத்திடம் வருணித்தார்.

ஐஃபோன் மூலம் எடுக்கப்பட்ட பூமியின் சில படங்களை அவர் அனுப்பி வைத்தார்.

பூமியிலிருந்து 64,000 கிலோ மீட்டருக்கு மேற்பட்ட தொலைவில் இருந்து சூரியனுடைய ஒளியைப் பிரதிபலிக்கும் பூமி சுருங்குவதைப் போல காட்சியளிப்பதாகவும் அவர் சொன்னார்.

“நாங்கள் இருக்கும் இடத்திலிருந்து பார்க்கும்போது எல்லாமே மிக அழகாக இருக்கிறது,” என்று மற்றொரு விண்வெளி வீரரான கிறிஸ்டினா கோச் தெரிவித்தார்.

“ கோளின் (பூமி) கடலோரங்களையும் ஆறுகள் சூரியனுடைய ஒளியில் பிரகாசிப்பதையும் காண முடிகிறது. உயரமான இடி மேகங்களைப் பார்க்க முடிகிறது. தென்துருவம் ஒளிர்வதையும் காண முடிகிறது,” என்று அவர் கூறினார்.

நிலவுக்கான விண்கலத்தில் சிறு சிறு கோளாறுகள் உள்ளன. கழிவறையில் பிரச்சினை இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது. ஆரம்பத்தில் மைக்ரோசாஃப்ட் அவுட்லுக்கில் மின்அஞ்சல்களைப் பார்க்க முடியவில்லை என்று கூறப்பட்டது. இது, பின்னர் சரி செய்யப்பட்டது.

விண்வெளி வீரர்கள் ‘கோபுரோஸ், ‘ஐஃபோன்’ மூலம் தங்களுடையப் பயணத்தை ஆவணப்படுத்தி வருகின்றனர்.

விண்வெளி வீரர்கள் எடுத்த பூமியின் படத்தை நாசா இன்னமும் வெளியிடவில்லை. பின்னர் அது வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. பூமி உதயமாகும் படமும் அவற்றுள் அடங்கும்.

ஆறாவது நாளில் விண்வெளி வீரர்கள் பூமியிலிருந்து 400,000 கிலோ மீட்டர் தொலைவை அடைவார்கள். இது, மனிதர்கள் விண்வெளியில் பயணித்ததிலேயே மிகவும் தொலைவான இடமாகும். அப்போது பூமி ஒரு கூடைப்பந்தைவிட சிறியதாகக் காட்சியளிக்கும்.

குறிப்புச் சொற்கள்