கோலாலம்பூர்: மலேசியாவில் திங்கட்கிழமை (ஆகஸ்ட் 31) நடைபெறவுள்ள தேசிய தினக் கொண்டாட்டங்கள் சுமுகமாக நடைபெறும் என்று அந்நாட்டு மாமன்னர் இப்ராஹிம் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
நிகழ்ச்சியுடன் தொடர்புடைய அனைத்துத் தரப்பினரும் அதன் வெற்றியை உறுதி செய்யத் தங்களால் முடிந்த அனைத்தையும் செய்வார்கள் என்றும் அவர் குறிப்பிட்டார்.
மலேசியப் பிரதமர் அன்வார் இப்ராகிமின் சந்திப்புக்குப் பிறகு மாமன்னர் இப்ராஹிம் அவ்வாறு தெரிவித்துள்ளார். அதுகுறித்து ஃபேஸ்புக் பக்கத்தில் தகவல் ஒன்றையும் அவர் பகிர்ந்துள்ளார்.
“தேசிய தினக் கொண்டாட்டங்கள் சுமுகமாக நடைபெறும் என்று நான் நம்புகிறேன். நமது நாட்டின் வரலாற்றில் இந்த முக்கியமான நிகழ்வைச் சிறப்பிக்கச் சம்பந்தப்பட்ட அனைவரும் தங்களின் சிறந்த பங்களிப்பை வழங்குவதைக் காண ஆவலுடன் காத்திருக்கிறேன்,” என்று மாமன்னர் கூறினார்.
இந்தச் சந்திப்பின்போது, கொண்டாட்டங்களுக்கான ஏற்பாடுகள் உட்பட நாட்டின் அண்மைய நிலவரங்கள் குறித்தும் மாமன்னரிடம் விவரிக்கப்பட்டது.
மலேசியாவில் 69வது தேசிய தினக் கொண்டாட்டங்கள் திங்கட்கிழமை காலை 8 மணிக்கு புத்ராஜெயா சதுக்கத்தில் தொடங்கத் திட்டமிடப்பட்டுள்ளன.
அதில் 76 குழுக்களைச் சேர்ந்த 10,819 அணிவகுப்பாளர்கள், 22 அணிவகுப்பு இசைக்குழுவினர் கலந்துகொள்கின்றனர்.
இந்தக் கொண்டாட்டங்களில் மாமன்னர் இப்ராஹிம், அரசியார் ராஜா சரீத் சோஃபியா, பிரதமர் அன்வார், அமைச்சரவை உறுப்பினர்கள் கலந்துகொள்ளத் திட்டமிடப்பட்டுள்ளது.


