புகைமூட்டம் மோசமடைந்தால் பினாங்கில் தேசிய தின அணிவகுப்பு ரத்து செய்யப்படக்கூடும்

புகைமூட்டம் மோசமடைந்தால் பினாங்கில் தேசிய தின அணிவகுப்பு ரத்து செய்யப்படக்கூடும்

படம்: பெர்னாமா

27 Aug 2026 - 6:20 pm

2 mins read

ஜார்ஜ் டவுன்: மலேசியாவின் பினாங்கு மாநிலத்தில் ஆகஸ்ட் 31ஆம் தேதியன்று ‘பாடாங் கோத்தா லாமா’வில் நடைபெறவிருக்கும் மாநில அளவிலான தேசிய தின அணிவகுப்பு, புகைமூட்ட நிலைமை மேலும் மோசமடைந்தால் ரத்து செய்யப்படக்கூடும் என மாநில முதலமைச்சர் சாவ் கோன் யாவ் தெரிவித்துள்ளார்.

திறந்தவெளியில் நடைபெறும் இந்த நிகழ்வை நடத்துவது குறித்து தீர்மானிப்பதற்கு முன், அடுத்த சில நாள்களுக்குக் காற்றின் தரத்தை மாநில அரசு உன்னிப்பாகக் கண்காணிக்கும் என்று அவர் கூறினார்.

கோம்தாரில் வியாழக்கிழமை (ஆகஸ்ட் 27) நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் திரு சாவ் பேசினார்.

தேசிய தின அணிவகுப்பு திறந்தவெளியில் நடத்தப்படுவதால் காற்றின் தரம் என்பது தமக்கு மிகவும் கவலையளிக்கும் முக்கிய விவகாரமாக உள்ளது எனக் குறிப்பிட்டார். பினாங்கைப் பொறுத்தவரை, இந்த அணிவகுப்பை உள்ளரங்கில் நடத்துவது சாத்தியமில்லாத ஒன்றாகும் என்று கூறிய அவர், காற்றின் தூய்மைக்கேட்டுக் குறியீடு 200 அல்லது அதற்கும் மேல் பதிவானால், இந்நிகழ்வைத் தொடர்ந்து நடத்தாமல் கைவிடுவதே நல்லது என்றும் விளக்கினார். இருப்பினும், அணிவகுப்பு நடப்பதற்கு இன்னும் சில நாள்கள் இருப்பதால் இதுவரை எந்தவொரு இறுதி முடிவும் எடுக்கப்படவில்லை என்றும் நிலைமை தொடர்ந்து தீவிரமாகக் கண்காணிக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

மேலும், அணிவகுப்பை விளையாட்டரங்கிற்கு மாற்றுவது நடைமுறைத் தீர்வாக இருக்காது என்றும் ஏனெனில் அதுவும் ஒரு திறந்தவெளி இடமாகவே இருக்கும் என்பதால் அதையும் தாங்கள் கருத்தில் கொள்ள வேண்டும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

இதனிடையே, பினாங்கிலுள்ள நான்கு சுற்றுச்சூழல் துறை காற்றுத் தரக் கண்காணிப்பு நிலையங்களிலும் புதன்கிழமை (ஆகஸ்ட் 26) பிற்பகல் 2.30 மணி நிலவரப்படி காற்றின் தூய்மைக்கேட்டுக் குறியீடு மிதமான அளவிலேயே பதிவாகியுள்ளது. அதன்படி, பாலிக் புலாவில் 75, கெலுகோர் 78, செபராங் ஜெயாவில் 73 மற்றும் சிம்பாங் அம்பாட்டில் 83 ஆகவும் குறியீடு பதிவாகியிருந்தது.

பொதுவாகக் காற்றின் தூய்மைக்கேட்டுக் குறியீடு 51 முதல் 100 வரை இருப்பது மிதமான அளவாக வகைப்படுத்தப்படுகிறது, அதேவேளையில் 101 முதல் 200 வரையிலான பதிவுகள் ஆரோக்கியமற்ற நிலவரமாகக் கருதப்படுகின்றன.

குறிப்புச் சொற்கள்
மலேசியாபினாங்குபுகைமூட்டம்தேசிய தின அணிவகுப்பு