தனிப்பெரும்பான்மையைத் தக்கவைக்கும் நம்பிக்கையில் தேசிய முன்னணி: ஆய்வாளர்கள்

தனிப்பெரும்பான்மையைத் தக்கவைக்கும் நம்பிக்கையில் தேசிய முன்னணி: ஆய்வாளர்கள்

2 mins read
7151cc5c-ea3a-4643-8318-770d73bf4952
சட்டமன்றம் கலைக்கப்படுவதாக மாநில முதல்வர் ஒன் ஹஃபிஸ் காஸி திங்கட்கிழமை (ஜூன் 1) அறிவித்தார்.  - படம்: பெர்னாமா

கோலாலம்பூர்: பாரிசான் நேஷனல் எனப்படும் தேசிய முன்னணி தனது தனிப்பெரும்பான்மையை மீண்டும் பெறும் என்னும் நம்பிக்கையில் ஜோகூர் மாநில சட்டமன்றம் கலைக்கப்பட்டுள்ளதாக அரசியல் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

சட்டமன்றம் கலைக்கப்படுவதாக மாநில முதல்வர் ஒன் ஹஃபிஸ் காஸி திங்கட்கிழமை (ஜூன் 1) அறிவித்தார். அவசரமாக ஏற்பாடு செய்யப்பட்ட செய்தியாளர்கள் கூட்டத்தில் பேசிய அவர், சட்டமன்றத்தைக் கலைக்க ஜோகூர் ஆட்சியாளர் இஸ்மாயில் சுல்தான் இப்ராகிம் அனுமதி அளித்துள்ளதாகக் கூறினார்.

தேர்தல் ஆணையத்தின் அறிவிப்புக்கு உட்பட்டு, ஜோகூர் மாநிலத் தேர்தல் வாயிலாக ஜனநாயகச் செயல்முறைக்கு வழிவகுப்பதே சட்டப்பேரவை கலைப்பிற்கான நோக்கம் என்று முதல்வர் கூறியதாக பெர்னாமா தெரிவித்தது.

சட்டமன்றம் கலைக்கப்பட்ட 60 நாள்களுக்குள் தேர்தல் நடத்தப்பட வேண்டும். அதன்படி, ஜூலை 31க்குள் ஜோகூர் சட்டமன்றத் தேர்தல் நடைபெற்றாக வேண்டும்.

அடுத்த தேர்தல் உள்ளிட்ட பல அம்சங்கள் குறித்து ஆலோசிப்பதற்காக ஜூன் 22ஆம் தேதி சட்டமன்றம் கூடும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், திடீரென்று சட்டமன்றம் கலைக்கப்பட்டுள்ளது.

கலைக்கப்பட்ட சட்டமன்றத்தின் 56 உறுப்பினர்களில் 40 பேரைப் பெற்று தனிப்பெரும்பான்மையுடன் இருந்த தேசிய முன்னணி, நடைபெற இருக்கும் தேர்தலிலும் வலுவான ஆதரவைப் பெற்று தனிப்பெரும்பான்மை பெறும் என்ற நம்பிக்கையில் உள்ளதாக அரசியல் பார்வையாளர்கள் கூறுகின்றனர்.

மேலும், இந்த நடவடிக்கை, மத்தியில் தேசிய முன்னணிக்கும் பக்கத்தான் ஹரப்பானுக்கும் இடையிலான உறவில் இறுக்கத்தை அதிகரிக்கும் என்றும் அவர்கள் கருதுகின்றனர்.

மத்தியில் பக்கத்தான் ஹரப்பான் அரசாங்கத்துக்கு தேசிய முன்னணி ஆதரவளித்துவரும் நிலையில் அந்த இரண்டு கூட்டணிக்கும் இடையிலான உறவு ஏற்கெனவே கசப்படைந்து உள்ளது.

தேசிய முன்னணி வலுவான நிலையில் இருப்பதைப்போலத் தோன்றும் நிலையில் பக்கத்தான் ஹரப்பான் பலவீனமாகக் காணப்படுகிறது.

கலைக்கப்பட்ட சட்டமன்றத்தில் 12 உறுப்பினர்களை மட்டுமே கொண்டிருந்த பக்கத்தான் ஹரப்பான் வரும் தேர்தலில் எந்த அளவுக்கு ஆதரவைப் பெறும் என்பது தெரியவில்லை.

வரும் தேர்தலில் 56 தொகுதிகளிலும் போட்டியிடப்போவதாக தேசிய முன்னணி அறிவித்துள்ளது. அதேபோன்ற அறிவிப்பை பக்கத்தான் ஹரப்பான், பெரிக்கத்தான் நேஷனல் ஆகிய கூட்டணிகளும் புதிய பெர்சாமா கட்சியும் அறிவித்துள்ளதால் நான்கு முனைப் போட்டி ஏற்படும் சாத்தியம் நிலவுகிறது.

தேசிய முன்னணியின் முதன்மைக் கட்சியான அம்னோ, தனது முன்னாள் தலைவர்கள் மீண்டும் கட்சிக்குள் வந்திருப்பதால் ஊக்கமடைந்துள்ளது. அந்த நான்கு தலைவர்களில் இருவர் ஜோகூரைச் சேர்ந்தவர்கள்.

அதேவேளை, நேர்மை, இனம், சமயம் தொடர்பான அடுத்தடுத்த பிரச்சினைகளின் காரணமாக, பக்கத்தான் ஹரப்பான் தனது முக்கிய ஆதரவாளர்களை, குறிப்பாக, நகர்ப்புற முற்போக்குவாதிகளையும் முஸ்லிம் அல்லாதவர்களையும் பெருமளவில் இழந்து வருகிறது.

குறிப்புச் சொற்கள்
ஜோகூர்சட்டமன்றம்முதல்வர்