பொதுத்தேர்தல் வரை ஒற்றுமை அரசாங்கத்தை தேசிய முன்னணி ஆதரிக்கும்

பொதுத்தேர்தல் வரை ஒற்றுமை அரசாங்கத்தை தேசிய முன்னணி ஆதரிக்கும்

2 mins read
792314c9-a7b8-4b1d-97a2-7ecac3d1c7a8
ஒற்றுமை அரசாங்கத்திற்கான தேசிய முன்னணியின் ஆதரவு உறுதியாக உள்ளது என்று அதன் பொதுச் செயலாளர் ஸம்ப்ரி அப்துல் காதிர் கூறியதாக ‘த ஸ்டார்’ செய்தி வெளியிட்டுள்ளது.  - படம்: பெர்னாமா
Google News Preferred Icon

கோலாலம்பூர்: மலேசியப் பொதுத்தேர்தல் விரைவில் நடத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கைகள் எழுந்தபோதிலும் ‘பாரிசான் நேஷனல்’ எனப்படும் தேசிய முன்னணியின் ஒற்றுமை அரசாங்கத்திற்கும் நாட்டின் அரசியல் நிலைத்தன்மைக்கும் தொடர்ந்து உறுதுணையாக இருக்கும் என்று அதன் பொதுச் செயலாளர் ஸம்ப்ரி அப்துல் காதிர் தெரிவித்துள்ளார்.

16வது பொதுத்தேர்தலை விரைவில் நடத்த வேண்டும் என்று கூட்டணிக்குள் கோரிக்கைகள் எழுந்துள்ள நேரத்தில் திரு  ஸம்ப்ரி இவ்வாறு கூறியுள்ளார்.

ஒற்றுமை அரசாங்கத்திற்கான தேசிய முன்னணியின் ஆதரவு உறுதியாக உள்ளது என்று திரு ஸம்ப்ரி கூறியதாக ‘த ஸ்டார்’ செய்தி வெளியிட்டுள்ளது. 

மேலும், தேர்தலை விரைவில் நடத்துவதற்கான கோரிக்கைகள், கூட்டணி தானாகவே கூட்டாட்சி அதிகாரத்தை மீண்டும் கைப்பற்றும் என்ற மிதமிஞ்சிய நம்பிக்கையாகப் பொருள் கொள்ளப்படக் கூடாது என்றும் அவர் வலியுறுத்தினார்.

“தேர்தல் விரைவில்  நடத்தப்பட அம்னோவும் தேசிய முன்னணியும் வேண்டும் என்று விரும்பினாலும், நாங்கள் வெற்றி பெற்று ஆட்சி அமைப்போம் என்பதில் அளவுக்கு மீறிய தன்னம்பிக்கையுடன் நாங்கள் இல்லை,” என்று அவர் கூறினார்.

அடுத்த பொதுத் தேர்தலுக்கு முன் ஒற்றுமை அரசாங்கத்தை மட்டுப்படுத்தவோ வீழ்த்தவோ தேசிய முன்னணியின் கூட்டணிக் கட்சிகளுக்கு எந்த எண்ணமும் இல்லை என்று அவர் கூறினார்.

தேர்தல் தேதி அறிவிக்கப்படும் வரை இந்த அரசாங்கத்தைத் தக்கவைக்க தாங்கள் கடமைப்பட்டுள்ளதாகவும் திரு ஸம்ப்ரி கூறினார்.

16வது பொதுத்தேர்தலை விரைவில் நடத்துவதற்குப் பாரிசான் நேஷனல் தலைவர் ஸாஹித் அண்மையில் ஆதரவு தெரிவித்திருந்த நிலையில், திரு ஸம்ப்ரியின் இந்தக் கருத்துகள் வெளியாகியுள்ளன. 

தேர்தல் விரைவில் நடத்தப்பட்டால், வாக்காளர்களிடமிருந்து ஆதரவைப் பெற அரசாங்கத்திற்கு வாய்ப்பளிக்கும் என்று திரு ஸாஹித் கூறியிருந்தார்.

இருப்பினும், தற்போதைய நாடாளுமன்றக் காலம் முழுமையாக நிறைவடைந்தால், அதன் இறுதியிலும் 16வது பொதுத்தேர்தலைச் சந்திக்க தேசிய முன்னணி தயாராக உள்ளது என்றும் திரு ஸாஹித் கூறியிருந்தார்.

குறிப்புச் சொற்கள்
தேர்தல் துறைதேசிய முன்னணிஅரசாங்கம்மலேசியா