வாஷிங்டன்: அமெரிக்கத் தலைநகர் வாஷிங்டனில் வெள்ளை மாளிகைக்கு அருகே சுடப்பட்ட தேசியப் பாதுகாவற்படையைச் சேர்ந்த ஒருவர் மாண்டுவிட்டார்.
வெஸ்ட் வெர்ஜினியாவைச் சேர்ந்த 20 வயது ராணுவ அதிகாரி சாரா பெக்ஸ்ட்ரோம் மரணமடைந்ததாக அதிபர் டோனல்ட் டிரம்ப் வியாழக்கிழமை (நவம்பர் 27) தெரிவித்தார்.
துப்பாக்கிச் சூட்டுக்கு ஆளான இன்னொருவர் அமெரிக்க ஆகாயப்படையின் 24 வயது சார்ஜென்ட் ஆண்ட்ரூவ் வோல்ஃப். அவரின் நிலைமை கவலைக்கிடமாய் இருப்பதாகக் கூறப்படுகிறது.
“இளையரின் நிலைமை மிகவும் மோசமாக உள்ளது. அவர் உயிருக்காகப் போராடுகிறார். அவரின் உடல்நிலை குறித்து நல்ல தகவல் வரும் என்று நம்புகிறோம்,” என்று திரு டிரம்ப் சொன்னார்.
துப்பாக்கிச் சூட்டின் தொடர்பில் ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த 29 வயது ரஹ்மனுல்லா லக்கன்வாலை சந்தேக நபராக அமெரிக்க அதிகாரிகள் அடையாளம் கண்டுள்ளனர்.
அவர் ஆப்கானிஸ்தானில் அமெரிக்கப் படையினருடனும் மத்திய வேவுத் துறை அதிகாரிகளுடனும் இதற்கு முன்னர் வேலை செய்திருக்கிறார். அதன் பின்னர் 2021ல் ரஹ்மனுல்லா அமெரிக்காவுக்குச் சென்றுசேர்ந்தார்.
துப்பாக்கிச் சூட்டுக்குப் பிறகு, அவர் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளார். அவரின் நிலைமை மோசமாய் இருப்பதாகத் திரு டிரம்ப் சொன்னார்.
சுடப்பட்டோரில் ஒருவர் மாண்டாலும் அவருக்கு மரண தண்டனை விதிக்கும்படி கோரப்போவதாகத் தலைமைச் சட்ட அதிகாரி பாம் போண்டி வியாழக்கிழமை கூறியிருந்தார். துப்பாக்கி சூட்டுச் சம்பவத்தைத் தொடர்ந்து அதிகாரிகள் நாடு தழுவிய நிலையில் பயங்கரவாதப் புலனாய்வு விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர். வாஷிங்டன், கலிபோர்னியா உள்ளிட்ட மாநிலங்களிலும் தேடுதல் வேட்டை தொடர்கிறது.
தொடர்புடைய செய்திகள்
லக்கன்வாலை நாட்டிற்குள் அனுமதித்ததற்காகத் திரு டிரம்ப்பும் துணையதிபர் ஜே டி வான்சும் அவரின் நிர்வாகத்தில் உள்ள மற்றோரும் பைடன் நிர்வாகத்தைச் சாடினர்.

