சிலாங்கூர்: கோயில்களுக்கு எதிராகச் செயல்படும் கும்பலை எதிர்த்து நாம் ஒன்றிணைய வேண்டும் என்றால் முறையான திட்டமிடல் இருக்க வேண்டும் என சிலாங்கூர் கோத்தா கெமுனிங் சட்டமன்ற உறுப்பினர் பிரகாஷ் சம்புநாதன் வலியுறுத்தியுள்ளார்.
வழக்கறிஞருமான திரு பிரகாஷ், கோயில் நிர்வாகங்கள் முறையாகப் பதிவு செய்யப்படாமல் இருப்பதாலும் குறைந்த எண்ணிக்கையிலான கோயில்களே சங்கங்கள் பதிவகத்தில் பதிவு செய்யப்பட்டிருப்பதாகவும் சுட்டிக்காட்டினார். இதற்கு ஒரே தீர்வு என்னவென்றால், தேசிய அளவில் இயங்கும்படியான இந்து அறப்பணி வாரியம் அமைக்கப்பட வேண்டும் என்றும் அப்படி அமைக்கப்படும் இந்து அறப்பணி வாரியம் நாடாளுமன்றச் சட்டத்திற்கு உட்பட்டு இருக்க வேண்டும் என்றும் திரு பிரகாஷ் வலியுறுத்தினார்.
தேசிய இந்து அறப்பணி வாரியத்தின் மூலமாக அனைத்துக் கோயில்களும் முறையாகப் பதிவு செய்யப்பட்டு, நிரந்தரமாக நிலம் வழங்கப்பட்டு, ஆண்டறிக்கைகள் சமர்ப்பிக்கப்படுவதை இந்து அறப்பணி வாரியம் உறுதி செய்ய வேண்டும் என அவர் தெரிவித்தார்.
இதற்கிடையே, நாடு முழுவதும் உள்ள இந்து கோவில்களின் பிரச்சினைகளைத் தீர்க்க, தேசிய கோவில் ஒருங்கிணைப்புக் குழு அமைக்கப்பட வேண்டும் என்ற அவசரத் தேவையை விவாதிக்க சிறப்புக் கூட்டமொன்று ஞாயிற்றுக்கிழமை (பிப்ரவரி 15) அன்று பெட்டாலிங் ஜெயாவில் நடைபெற்றது.
மலேசிய இந்து சங்கம், மலேசிய இந்து தர்ம மாமன்றம் உள்ளிட்ட இந்து அமைப்புகளின் பிரதிநிதிகள் அதில் பங்கேற்றனர்.
ம.இ.கா. தேசியத் துணைத் தலைவரும் தாப்பா நாடாளுமன்ற உறுப்பினருமான எம். சரவணனும் அதில் கலந்துகொண்டார்.
கூட்டத்தில், அனைத்து இந்து தலைவர்களும் பிரதிநிதிகளும் இணைந்து செயல்பட வேண்டும் என ஒற்றுமை, வெளிப்படைத்தன்மை, கூட்டுத் தீர்மானம் வாயிலாக வலியுறுத்தப்பட்டது.
குறிப்பாக, நிலப் பதிவு இல்லாத கோவில்களை குறிப்பிட கே.டி.பி.டி. (Kuil Tanpa Pendaftaran Tanah) என்ற அதிகாரபூர்வ சொல்லையே பயன்படுத்த வேண்டும் என தீர்மானிக்கப்பட்டது.
தொடர்புடைய செய்திகள்
அதே நேரத்தில், பிரதமர் அன்வார் இப்ராகிமை உடனடியாகச் சந்திக்க அனுமதியும் கோரப்பட்டுள்ளது.
கோவில்களுக்கு எதிரான அனைத்து நடவடிக்கைகளையும் உடனடியாக நிறுத்துமாறு அரசாங்கத்திடம் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
இந்த முயற்சி, தர்மத்தைக் காக்கவும், வழிபாட்டுத் தலங்களைப் பாதுகாக்கவும், நீதியை நிலைநாட்டவும் எடுத்துக்கொள்ளப்பட்ட முக்கியமான படியாகும் என இந்து தர்ம மாமன்றத்தின் தலைவர் ரிஷிகுமார் வடிவேலு குறிப்பிட்டார்.

