புத்ராஜெயா: சுற்றுலா அல்லது மாணவர் விசாக்களைத் தவறாகப் பயன்படுத்தும் வெளிநாட்டினர் சம்பந்தப்பட்ட சட்டவிரோத வணிக நடவடிக்கைகளுக்கு எதிராக நாடு தழுவிய ஒருங்கிணைந்த நடவடிக்கையை மேற்கொள்ளுமாறு மலேசியப் பிரதமர் அன்வார் இப்ராகிம் திங்கட்கிழமையன்று (ஜூன் 8) உத்தரவிட்டார்.
சட்டவிரோதமாக வணிக உரிமங்களைப் பெற்றவர்கள்மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பலமுறை எச்சரிக்கப்பட்டும் மீண்டும் மீண்டும் நிகழும் விதிமீறல்களை அரசாங்கம் இனியும் பொறுத்துக்கொள்ளாது என்று அவர் குறிப்பிட்டார்.
“நாங்கள் எண்ணற்ற எச்சரிக்கைகளை விடுத்துள்ளோம். ஆனால், அவர்கள் அதை உடனடியாக நிறுத்துவதற்கு இப்போது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்,” என்று அவர் கூறினார்.
இணையவழி வணிக நடவடிக்கைகள், நிதிப் பரிவர்த்தனைகள், உரிமத்திற்கு இணங்கி நடப்பது, வரி செலுத்துதல், குடிநுழைவுக் குற்றங்கள் ஆகியவற்றை ஆய்வுசெய்வது உட்பட, இந்தப் பிரச்சினையைச் சமாளிக்க பல அமைப்புகள் ஈடுபடுத்தப்படும் என்று அன்வார் தெரிவித்தார்.
மலேசிய மத்திய வங்கியும் மலேசிய தகவல் தொடர்பு, பல்லூடக ஆணையமும், மின்வணிகத் தளங்களில் நடைபெறும் செயல்பாடுகளை ஆய்வுசெய்து, பணமோசடி தடுப்புச் சட்டங்களின்கீழ் பணப் பரிவர்த்தனைகளைக் கண்காணிக்கும்.
“உள்ளாட்சி மன்றங்களும் உள்நாட்டு வணிகம் மற்றும் வாழ்க்கைச் செலவு அமைச்சும் வணிகர்களின் உரிமத் தகுதியைச் சரிபார்க்கும். அதே நேரத்தில், மலேசிய அரச சுங்கத் துறை வரிகள் முறையாகச் செலுத்தப்படுவதை உறுதிசெய்யும். அனுமதிச் சீட்டுகள், விசாக்களின் தவறான பயன்பாடு தொடர்பில் குடிநுழைவுத் துறை கவனம் செலுத்தும்,” என்று தகவல் தொடர்பு அமைச்சில் நடைபெற்ற மாதாந்தரக் கூட்டத்தில் அன்வார் விளக்கினார்.
மேலும், இந்தப் பிரச்சினையை வெளிப்படையாக முன்னிலைப்படுத்தி, இதுபோன்ற தவறுகளை மலேசிய அரசாங்கம் சாதாரணமாக எடுத்துக்கொள்ளாது என்ற தெளிவான செய்தியைத் தெரிவிக்க வேண்டும் என்றும் தகவல் தொடர்பு அமைச்சை அவர் கேட்டுக்கொண்டார்.
“தகவல் தொடர்பு அமைச்சு இந்த விவகாரத்தை முன்னிலைப்படுத்தி, ஒரு வலுவான செய்தியை அனுப்பும் என்று நம்புகிறேன்,” என்று அவர் கூறினார்.
தொடர்புடைய செய்திகள்
சில அமைப்புகள் ஆக்கபூர்வமான பங்களிப்பை வழங்கத் தவறியுள்ளன என்பதைக் குறிப்பிட்ட பிரதமர், வணிகச் சங்கங்களும் அமலாக்க அமைப்புகளுடன் ஒத்துழைக்க வேண்டும் என்றும் கூறினார்.

