அங்காரா: நேட்டோ தலைவர்கள், துருக்கியில் பல பில்லியன் டாலர் மதிப்புள்ள ஆயுத ஒப்பந்தங்களைச் செவ்வாய்க்கிழமை (ஜூலை 7) வெளியிடத் திட்டமிட்டுள்ளனர்.
ஐரோப்பாவைப் பாதுகாக்கக் கூடுதல் நிதியைச் செலவிடுமாறு அமெரிக்கா விடுத்த அழைப்பிற்கு அவர்கள் செவிசாய்ப்பதை உறுதிப்படுத்தும் வகையில் அது அமைந்துள்ளது.
அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் அந்த மாநாட்டில் பங்கேற்கவிருக்கிறார். நேட்டோ தற்காப்புத் தொழில்துறைக் கருத்தரங்கில் ஒப்பந்தங்கள் பற்றி அறிவிக்க ஐரோப்பிய அரசாங்கங்கள் எண்ணியுள்ளன. மாநாட்டில் அதிபர் டிரம்ப், துருக்கிய அதிபர் தயிப் எர்துவானையும் மற்றத் தலைவர்களையும் சந்தித்துப் பேசுவார்.
ரஷ்ய அச்சுறுத்தலின் காரணமாக ஐரோப்பிய நாடுகள் பாதுகாப்புச் செலவினங்களை மிகப்பெரிய அளவில் அதிகரித்துள்ளதாக நேட்டோ அமைப்பின் தலைமைச் செயலாளர் மார்க் ரட்ட கூறினார். திரு டிரம்ப் அவ்வாறு செய்யத் தூண்டியதும் 2022ஆம் ஆண்டு உக்ரேன்மீது ரஷ்யா படையெடுத்ததும் அதற்குக் காரணங்களாகச் சொல்லப்படுகின்றன.
ஐரோப்பிய அரசாங்கங்கள் நேட்டோ அமைப்பின் மூலம் அமெரிக்காவை அளவுக்கு அதிகமாய்ச் சார்ந்திருப்பதாகத் திரு டிரம்ப் நீண்ட காலமாகக் குற்றஞ்சாட்டி வருகிறார். கெடுபிடிப் போரின் ஆரம்ப ஆண்டுகளிலிருந்து ஐரோப்பியக் கண்டத்தை அந்த அமைப்பு பாதுகாத்து வருகிறது.
“இது ஒரு நியாயமான ஒப்பந்தம் என்பதை அமெரிக்கா அறிந்திருக்கும் நிலையில், நாங்கள் இப்போது நீடித்த கூட்டணியை உருவாக்குகிறோம்,” என்று திரு ரட்ட அங்காராவில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
இதற்கிடையே, அதிகரித்துவரும் ரஷ்யத் தாக்குதல்களிலிருந்து பாதுகாத்துக்கொள்ள உக்ரேனிய அதிபர் வொலோடிமிர் ஸெலென்ஸ்கி நேட்டோ கூட்டத்தைப் பயன்படுத்திக்கொள்ளத் திட்டமிட்டுள்ளார். உக்ரேனுக்கு அவசரமாகத் தேவைப்படும் ஆகாயத் தற்காப்புக் கட்டமைப்புகளை வழங்குமாறு நட்பு நாடுகளிடம் அவர் வலியுறுத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த ஒரு வாரத்தில் உக்ரேனியத் தலைநகர் கியவில் ரஷ்ய ஏவுகணைகள் நடத்திய தாக்குதல்களில் பல குடியிருப்புக் கட்டடங்கள் சேதமடைந்தன. அவற்றில் 50க்கும் மேற்பட்ட பொதுமக்கள் மாண்டனர். இந்நிலையில் உக்ரேனிய அதிபர் அவரின் கோரிக்கையை முன்வைக்கவிருக்கிறார்.

