லண்டன்: நேட்டோ கூட்டமைப்பில் உள்ள நாடுகள் அதன் அணுவாயுதங்களை தயார் நிலையில் வைக்க வேண்டும் என்று அமைப்பின் தலைவர் ஜென்ஸ் ஸ்டோல்டென்பர்க் தெரிவித்துள்ளார்.
பிரிட்டனின் ‘டெலிகிராப்’ நாளிதழிடம் திங்கட்கிழமை (ஜுன் 17) அவர் தெரிவித்தார்.
சீனா, ரஷ்யாவிடம் இருந்து அச்சுறுத்தல்கள் அதிகரித்து வருவதால் இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக ஸ்டோல்டென்பர்க் கூறினார்.
நேட்டோவில் உள்ள நாடுகள் வெளிப்படையாக தங்களது அணுவாயுதங்கள் குறித்து பேச வேண்டும், அதற்குதான் இந்த அமைப்பு உள்ளது என்று அவர் தெரிவித்தார்.
“அணுவாயுதங்கள் இல்லாத உலகம் தான் நேட்டோவின் குறிக்கோள். அணுவாயுதங்கள் உள்ளவரை நேட்டோ அமைப்பு தொடர்ந்து செயல்படும். ரஷ்யா, சீனா, வடகொரியா ஆகிய நாடுகள் அணுவாயுதங்கள் வைத்திருந்து நேட்டோவிடம் அணுவாயுதங்கள் இல்லாமல் இருந்தால் அது உலகுக்கு பெரும் ஆபத்தாக இருக்கும்” என்றார் ஸ்டோல்டென்பர்க்.
ரஷ்யாவுக்கு ஆபத்து வந்தால் அது அதன் அணுவாயுதங்களைப் பயன்படுத்தும் என்று அந்நாட்டு அதிபர் புட்டின் தொடர்ந்து எச்சரித்து வருகிறார். அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் உக்ரேனுக்கு பல பில்லியன் டாலர் நிதியுதவி கொடுத்து தங்களுக்கு நெருக்கடி எற்படுத்துவதாகவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
இந்நிலையில் அணுவாயுத தொழில்நுட்பத்தில் அமெரிக்கா சீனாவை விட கிட்டத்தட்ட 15 ஆண்டுகள் பின்தங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சீனா அதிக அளவில் அணுவாயுதத்திற்கு நிதி ஒதுக்கி தொடர்ந்து அந்த தொழில்நுட்பத்தை மேம்படுத்தி வருவதாகக் கூறப்படுகிறது.

