தற்காப்புச் செலவுகளை நேட்டோ உயர்த்தும்: அமெரிக்கா நம்பிக்கை

1 mins read
387aa891-f48d-4106-a9ce-1f5f98907aac
அமெரிக்கத் தற்காப்பு அமைச்சர் பீட் ஹெக்செத் (முன்வரிசையில் நடுவில்) நேட்டோ நட்பு நாடுகளின் பிரதிநிதிகளைச் சந்தித்துப் பேசினார். - படம்: ஏஎஃப்பி

பிரசல்ஸ்: தற்காப்புச் செலவினங்க்ளை அதிகரிக்கும்படி அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் கூறியதை நேட்டோ உறுப்பு நாடுகள் பின்பற்றும் என்று நம்பிக்கை கொண்டுள்ளதாக அமெரிக்கத் தற்காப்பு அமைச்சர் பீட் ஹெக்செத் வியாழக்கிழமை (ஜூன் 5) கூறியுள்ளார்.

நேட்டோ நட்பு நாடுகள் தங்கள் மொத்த உள்நாட்டு உற்பத்தியிலிருந்து ஐந்து விழுக்காட்டைத் தற்காப்பு முதலீட்டுக்கு ஒதுக்கும்படி திரு டிரம்ப் பரிந்துரைத்துள்ளார். அது தற்போது இரண்டு விழுக்காடாக உள்ளது.

“அதிபர் டிரம்ப் தொடங்கிய பணியைத் தொடர நாங்கள் இங்கு வந்திருக்கிறோம். அனைத்து நட்பு நாடுகளும் தற்காப்புச் செலவினங்களுக்கு ஐந்து விழுக்காட்டை ஒதுக்கவேண்டும். அது நடக்கும் என்று நினைக்கிறோம்,” என்ற திரு ஹெக்செத், “இம்மாதத்தின் பிற்பாதியில் த ஹேக்கில் நடைபெறவிருக்கும் உச்சநிலைச் சந்திப்புக்குள் அது நடைபெற்றாகவேண்டும்,” என்றார்.

அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளின் பாதுகாப்பை உறுதிசெய்வதில் தொடர்ந்து கடப்பாட்டுடன் இருக்க தற்காப்புச் செலவினங்களை உயர்த்தவேண்டும் என்பதை ஐரோப்பிய நட்பு நாடுகள் புரிந்துவைத்திருப்பதாக அரசதந்திரிகள் தெரிவித்தனர்.

“அது கூடுதல் முதலீடாகக் கருதப்படும்,” என்று நேட்டோ அமைப்பின் தலைமைச் செயலாளர் மார்க் ரட் கூறினார்.

ஹேக் உச்சநிலைச் சந்திப்பில் நேட்டோவில் உள்ள அனைத்து நாடுகளின் தற்காப்புச் செலவினத்தை உயர்த்துவது குறித்து முடிவெடுக்கப்படும் என்றார் அவர்.

திரு டிரம்ப்பின் ஐந்து விழுக்காட்டு இலக்கை எட்ட, நட்பு நாடுகள் தற்காப்புக்குச் செலவுகளுக்கு 3.5 விழுக்காட்டையும் விரிவான பாதுகாப்பு தொடர்பான செலவுகளுக்கு 1.5 விழுக்காட்டை மொத்த உள்நாட்டு உற்பத்தியிலிருந்து ஒதுக்கும்படி திரு ரட் பரிந்துரைத்தார்.

குறிப்புச் சொற்கள்