மனித உரிமைகளைப் பாதுகாக்க அமெரிக்காவுக்கு நவநீதம் பிள்ளை கோரிக்கை

மனித உரிமைகளைப் பாதுகாக்க அமெரிக்காவுக்கு நவநீதம் பிள்ளை கோரிக்கை

படம்: ராய்ட்டர்ஸ்

13 Oct 2026 - 10:05 pm

2 mins read

ஹேக்: உலக நாடுகளுக்கான மனித உரிமைகளையும் சுதந்திரத்தையும் பாதுகாக்கின்ற பாரம்பரியப் பணிக்கு அமெரிக்கா திரும்ப வேண்டும் என்று நோபல் அமைதிப் பரிசு வெற்றியாளர் நவநீதம் பிள்ளை செவ்வாய்க்கிழமை (அக்டோபர் 13) வலியுறுத்தியுள்ளார்.

அனைத்துலகக் குற்றவியல் நீதிமன்றத்தின் செயல்பாடுகளை முடக்க வாஷிங்டன் தீவிர நடவடிக்கை எடுத்துவரும் சூழலில் அவரின் கருத்து வந்துள்ளது.

உலக நாடுகள் சுதந்திரமாகச் செயல்படுவதில் அமெரிக்கா மீண்டும் தீவிரப் பங்காற்ற வேண்டும் என்று 85 வயதாகும் திருவாட்டி பிள்ளை நெதர்லாந்தின் ஹேக் நகரில் ராய்ட்டர்ஸ் ஊடகத்திடம் கூறினார்.

வெள்ளிக்கிழமை அவருக்கு நோபெல் பரிசு அறிவிக்கப்பட்ட சில மணிநேரங்களிலேயே, அவர் முன்பு பணியாற்றிய அனைத்துலகக் குற்றவியல் நீதிமன்றத்தைக் குறிவைத்து அமெரிக்கா கடுமையான தடைகளை அறிவித்தது.

தடைகள் அறிவிக்கப்பட்ட நேரம், தற்செயலானது அன்று எனத் திருவாட்டி பிள்ளை சொன்னார். அனைத்துலக ஒப்பந்தத்தின் மூலம் நிறுவப்பட்ட அமைப்பின்மீதான தாக்குதல் அது என்று அவர் குறிப்பிட்டார்.

“அதனால்தான், நியூரம்பெர்கிலிருந்து ஹேகிற்குத் திரும்பியதும் நான் செய்த முதல் வேலை, அனைத்துலகக் குற்றவியல் நீதியை ஊக்குவிப்பதிலும் ஏற்கெனவே தடைகளை எதிர்கொண்டுள்ளோரைப் பாதுகாப்பதிலும் ஈடுபட்டுள்ள அனைத்துலகக் குற்றவியல் நீதிமன்ற ஊழியர்களுக்கு எனது ஆதரவைத் தெரிவிக்கச் சென்றதுதான்,” என்றார் திருவாட்டி பிள்ளை.

இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாகுவையும் அவரின் முன்னாள் தற்காப்பு அமைச்சர் யோவ் காலன்ட் ஆகியோருக்கு எதிராக 2024ல் பிறப்பிக்கப்பட்ட கைதாணையால் அதிபர் டோனல்ட் டிரம்ப் பெரும் சினமடைந்தார். அதனைத் தொடர்ந்து, டிரம்ப்பின் நிர்வாகம் அண்மை மாதங்களில் அனைத்துலகக் குற்றவியல் நீதிமன்றத்திற்கு எதிரான பிரசாரத்தைத் தீவிரப்படுத்தியுள்ளது.

ஆக்கிரமிக்கப்பட்ட பாலஸ்தீனப் பகுதி தொடர்பான ஐக்கிய நாட்டு விசாரணைக் குழுவின் தலைவராகத் திருவாட்டி பிள்ளை கடந்த ஆண்டு சேவையாற்றினார். அந்தக் குழு காசாவில் இஸ்ரேல் இனப்படுகொலை செய்ததாக முடிவு செய்தது. இஸ்ரேல் அந்த அறிக்கையை ‘அதிர்ச்சியளிப்பதாகக்’ கூறி நிராகரித்தது.

குறிப்புச் சொற்கள்