இந்தோனீசிய நிலச்சரிவுகளில் ஏறத்தாழ 18 பேர் உயிரிழப்பு

1 mins read
மேலும் பலரைக் காணவில்லை
dfa84e54-0289-4939-86b4-fe672b3f3261
நிலச்சரிவால் பாதிக்கப்பட்டோரை மீட்கும் முயற்சியில் ஈடுபட்ட இந்தோனீசிய மீட்புக் குழுவினர். - படம்: ராய்ட்டர்ஸ்

ஜகார்த்தா: இந்தோனீசியாவின் மத்திய ஜாவா வட்டாரத்தைச் சேர்ந்த இரு பகுதிகளில் கடந்த வாரம் ஏற்பட்ட இரு நிலச்சரிவுகளில் ஏறத்தாழ 18 பேர் உயிரிழந்ததாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.

தேடல், மீட்புப் பணிகள் இன்னும் தொடர்வதாகத் திங்கட்கிழமை (நவம்பர் 17) அவர்கள் கூறினர்.

சிலாசாப் (Cilacap) நகரில் பத்துக்கு மேற்பட்ட வீடுகள் கடந்த வார நிலச்சரிவில் புதையுண்டதாக நாட்டின் பேரிடர் நிவாரண அமைப்பு கூறியது.

மூன்று முதல் எட்டு மீட்டர் ஆழத்தில் மக்கள் புதையுண்ட நிலையில் தேடல், மீட்புப் பணிகளில் சவால்களை எதிர்கொள்வதாக அது குறிப்பிட்டது.

சிலாசாப் நிலச்சரிவில் ஏறக்குறைய 16 பேர் மாண்டனர். மேலும் எழுவரைக் காணவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதற்கிடையே, மத்திய ஜாவாவின் பஞ்சாராநெகரா பகுதியில் கடந்த சனிக்கிழமை (நவம்பர் 15) ஏற்பட்ட நிலச்சரிவில் இருவர் உயிரிழந்தனர். மேலும் 27 பேரைக் காணவில்லை என்று அதிகாரிகள் கூறினர்.

அங்கு 30 வீடுகளும் பண்ணைகளும் சேதமடைந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.

இந்தோனீசியாவில் செப்டம்பர் மாதத்தில் தொடங்கிய மழைக்காலம் எதிர்வரும் ஏப்ரல் வரை நீடிக்கும் என்று கருதப்படுகிறது. இந்தக் காலகட்டத்தில் கனமழை பெய்யக்கூடும் என்றும் வெள்ளம் ஏற்படலாம் என்றும் அந்நாட்டு வானிலை ஆய்வகம் முன்னுரைத்துள்ளது.

குறிப்புச் சொற்கள்