ஜோகூர் பாரு: ஸ்கூடாயில் உள்ள சுல்தான் இஸ்மாயில் நீர் சுத்திகரிப்பு ஆலைக்குத் தண்ணீர் விநியோகம் செய்யும் மூலத்தில் பாதுகாப்புத் தரங்களை மீறும் அளவுக்கு அம்மோனியா நிலைகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அதனைத் தொடர்ந்து, கிட்டத்தட்ட 40,000 பயனீட்டாளர்களின் தண்ணீர் கணக்குகள் பாதிக்கப்பட்டன.
பாதிக்கப்பட்ட இடங்கள், குறிப்பாக ஸ்கூடாய், ஜோகூர் பாருவில் உள்ள குடியிருப்பாளர்களுக்குச் சுத்தமான தண்ணீர் விநியோகத்திற்கு இடையூறாக விளங்கும் மாசுச் சம்பவம் அது என்று ‘ரேன்ஹில் எஸ்ஏஜெ’ எனும் ஜோகூர் நீர் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி அன்வார் அப்துல் கனி கூறினார்.
‘‘ஒரே ஒரு தண்ணீர் விநியோகிப்பு நிறுவனமாக, நாங்கள் சம்பவத்தைக் கையாள துடிப்பான நடவடிக்கைகளை எடுத்துள்ளோம். பாதிக்கப்பட்ட கணக்குகளின் எண்ணிக்கையை 1,000க்குக் கீழ் கொண்டுவந்துள்ளோம்,’’ என்றார் அவர்.
‘‘அதிக அளவிலான அமோனியா, ஆற்று நீரை மாசுபடுத்தி, பயன்பாட்டுக்குப் பாதுகாப்பற்றதாக ஆக்கிவிடும். இது சுற்றுப்புறத்திற்கு மட்டும் கேடு விளைவிக்காது; பொதுச் சுகாதாரத்துக்கும் ஆபத்தானது,’’ என்று வெள்ளிக்கிழமை (ஜூலை 25) வெளியான அறிக்கையில் அவர் கூறினார்.
மாசுபாட்டு நிலைகளைக் கண்காணிக்க பாதிக்கப்பட்ட இடங்களில் உள்ள சில தண்ணீர் மாதிரிகள் சேகரிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
‘‘சம்பவத்துக்கான காரணத்தை அடையாளம் காணவும் தேவையான நடவடிக்கைகளை நடைமுறைப்படுத்தவும் நாங்கள் தகுந்த அமைப்புகளுடன் அணுக்கமாகச் செயல்பட்டு வருகிறோம்,’’ என்றார் அவர்.

