தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

அதிகமாக, வித்தியாசமாக செய்ய வேண்டும்: ஜெய்சங்சர் வலியுறுத்து

2 mins read
36f892f9-1711-4d58-8349-cd10278a1f16
இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர். - படம்: ராய்ட்டர்ஸ்

மாஸ்கோ: அமெரிக்க அதிபர் டிரம்ப் நிர்வாகத்தின் 50 விழுக்காட்டு வரியை இந்தியா எதிர்நோக்குகிறது. இந்த இக்கட்டான சூழ்நிலையில் இரண்டு நாள் பயணம் மேற்கொண்டு நெருங்கிய நட்பு நாடான ரஷ்யாவுக்குச் சென்றுள்ள இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், தவறான பாதையில் சிக்கிக் கொள்ளக் கூடாது, அதிகமாகச் செய்ய வேண்டும், வித்தியாசமாக செய்ய வேண்டும் என்பதே தாரக மந்திரம் என்று கூறியுள்ளார்.

சிக்கலான புவிசார்ந்த அரசியல் சூழ்நிலையில் இரு நாடுகளுக்கு இடையிலான முதலீட்டு, வர்த்தக நல்லுறவுகளை சாத்தியமான அளவில் முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று ரஷ்ய துணைப் பிரதமர் டெனிஸ் மன்டுரோவிடம் புதன்கிழமை வலியுறுத்தினார்.

இத்தகவலை இண்டியன் எக்ஸ்பிரஸ் வெளியிட்டிருந்தது.

இந்தியாவுக்கு ரஷ்யாவிலிருந்து எண்ணெய் இறக்குமதி செய்வதற்காக 25 விழுக்காடு வரி உட்பட 50 விழுக்காடு வரியை டிரம்ப் நிர்வாகம் அறிவித்துள்ளது.

திரு ஜெய்சங்கர் இன்று (ஆகஸ்ட் 21) ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்கே லாவ்ரோவையும் சந்திக்கிறார்.

தற்போதைய சூழ்நிலையைக் கையாள சிறப்பு உத்தியை உருவாக்க ரஷ்ய அதிகாரிகள் கோடி காட்டியிருக்கின்றனர்.

வரி மற்றும் வரியற்ற வர்த்தகத் தடைகளை தவிர்ப்பது, தளவாடங்களில் உள்ள தடைகளை அகற்றுவது, அனைத்துலக வட-கிழக்கு போக்குவரத்துப் பாதை, வடக்கு கடல் பாதை மற்றும் சென்னை-விளாடிவேஸ்டோக் பாதை ஆகியவற்றுக்கான இணைப்பை மேம்படுத்துவது, 2030 வரை பொருளியல் ஒத்துழைப்புத் திட்டத்தை சரியான நேரத்தில் செயல்படுத்தி இறுதி செய்தல், இந்திய-யூரே‌ஷிய பொருளியல் ஒன்றியத்தின் தாராள வர்த்தக ஒப்பந்தத்தை முன்னதாகவே முடிவு செய்தல் போன்றவற்றின் அவசியத்தை திரு ஜெய்சங்கர் எடுத்துரைத்தார்.

இந்தியாவின் வளர்ச்சி பற்றி பேசிய அவர், கடந்த நான்கு ஆண்டுகளாக இருதரப்பு வர்த்தகம் கூடியிருப்பதாகக் குறிப்பிட்டார்.

“நமது வர்த்தகம் ஐந்து மடங்கு அதிகரித்து 2021ஆம் ஆண்டில் 13 பில்லியன் யுஎஸ் டாலரிலிருந்து 2024-2025ல் 68 பில்லியன் யுஎஸ் டாலரை எட்டியிருக்கிறது,” என்று அவர் மேலும் தெரிவித்தார்.

இந்தியப் பிரதமர் மோடியும் ரஷ்ய அதிபர் புட்டினும் ஆகஸ்ட் 31, செப்டம்பர் 1ஆம் தேதிகளில் சீனாவில் நடைபெறும் ஷாங்காய் ஒத்துழைப்பு உச்சநிலை மாநாட்டையொட்டி சந்திக்கவிருக்கின்றனர்.

இதற்கிடையே ஜெய்சங்கரின் ரஷ்யப் பயணம் அமைகிறது.

குறிப்புச் சொற்கள்