செரம்பான்: நெகிரி செம்பிலான் மாநில ஆட்சியாளரைப் பதவிநீக்கம் செய்ய மாவட்டத் தலைவர்கள் மேற்கொண்டுவரும் முயற்சியில் முதல்வர் தலையிடுவதாகக் கூறி, அம்னோவின் 14 சட்டமன்ற உறுப்பினர்களும் அவருக்கு அளித்து வந்த ஆதரவை திங்கட்கிழமை (ஏப்ரல் 27) மீட்டுக்கொண்டனர்.
இதனால் முதல்வர் அமினுதீன் ஹருண் தனது பெரும்பான்மையை இழந்துள்ளார்.
மலேசியப் பிரதமர் அன்வார் இப்ராகிமின் கெஅடிலான் ரக்யாட் கட்சியின் (பிகேஆர்) துணைத் தலைவரான திரு அமினுதீனுக்கும், 36 இடங்களைக் கொண்ட சட்டமன்றத்தில் தற்போது 17 உறுப்பினர்களின் ஆதரவு மட்டுமே உள்ளது.
இந்தத் திடீர் அரசியல் திருப்பம், திரு அன்வாரின் பக்கத்தான் ஹரப்பான் கூட்டணிக்கும் அதன் முக்கியக் கூட்டணிக் கட்சியான அம்னோவுக்கும் இடையிலான ஒத்துழைப்பில் விரிசல் ஏற்பட்டுள்ளதா என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.
மாநில அம்னோ தலைமையகத்தில் திங்கட்கிழமை செய்தியாளர்களிடம் பேசிய நெகிரி செம்பிலான் அம்னோ தலைவர் ஜலாலுடின் அலியாஸ், மாநில ஆட்சியாளர் தொடர்பான விவகாரத்தில் திரு அமினுதீன் தங்களை ஆலோசிக்காமல் புறக்கணித்தது அதிருப்தி அளிப்பதாகக் கூறினார்.
“இத்தகைய நெருக்கடி, மாநில அரசின் நிர்வாகத்தைப் பாதிக்கக்கூடும் என்பதோடு, அரசாங்கத்தின் நிலைத்தன்மையிலும் சமூக நல்லிணக்கத்திலும் மறைமுகமாக பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் எனத் தெரிகிறது.
“எனவே, அம்னோவின் 14 சட்டமன்ற உறுப்பினர்களும் ஒருமனதாக முதல்வர் மீதான நம்பிக்கையை இழந்துவிட்டதாகவும் அவரது தலைமைத்துவத்திற்கு அளித்து வந்த ஆதரவை மீட்டுக்கொள்வதாகவும் நான் அறிவிக்கிறேன்,” என்று மாநிலத்தின் மூத்த நிர்வாகக் குழு உறுப்பினருமான திரு ஜலாலுதீன் கூறினார்.
இதற்கிடையே, திரு அமினுதீன் திங்கட்கிழமை பிற்பகல் தமது அதிகாரபூர்வ இல்லத்தில் அவசரக் கூட்டம் ஒன்றைக் கூட்டினார்.
தொடர்புடைய செய்திகள்
நெகிரி செம்பிலானில் புதிய அரசாங்கத்தை அமைப்பதற்கும் மாநிலத்தின் நிலைத்தன்மையை உறுதிப்படுத்துவதற்கும் அம்னோவின் 14 பிரதிநிதிகளுடன் இணைந்து பணியாற்றத் தயாராக இருப்பதாகப் பெரிக்கத்தான் நேஷனல் கூட்டணியின் ஐந்து சட்டமன்ற உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.

