கோலாலம்பூர்: மலேசியாவின் நெகிரி செம்பிலான் மாநிலச் சட்டமன்றத் தேர்தலில் தேசிய முன்னணி மொத்தமுள்ள 36 இடங்களில் 25ல் மட்டுமே போட்டியிடவிருக்கிறது.
அண்மையில் எதிர்த்தரப்பு பாஸ் கட்சி, தேசிய முன்னணியில் முக்கிய அங்கம் வகிக்கும் அம்னோ கட்சியுடன் சேர்ந்து பணியாற்ற விருப்பம் தெரிவித்திருந்தது. அதனைத் தொடர்ந்து தேசிய முன்னணியின் அறிவிப்பு வந்துள்ளது.
எஞ்சிய 11 இடங்களில் அது வேட்பாளர்களை நிறுத்தவில்லை. ‘நம்பிக்கையான நண்பர்’ ஒருவருடன் உடன்பாட்டை எட்டுவதற்கான முயற்சி, இறுதிக்கட்டத்தில் இருப்பதாக உள்ளூர் ஊடகம் தெரிவித்தது.
நெகிரி செம்பிலானில் அடுத்த மாதம் முதல்தேதி தேர்தல் நடைபெறவுள்ளது. வரும் சனிக்கிழமை (ஜூலை 18) மனுத்தாக்கல் தினம். அதன் பிறகு, 14 நாள்களுக்குத் தேர்தல் பிரசாரம் இடம்பெறும்.
“இன்னோர் அறிவிப்பு வெளியாகும், ஏனெனில் இந்த 16வது மாநிலத் தேர்தலில் நாம் நண்பர் ஒருவருடன் உடன்பாடு செய்துகொண்டு களம் இறங்குவோம்,” என்று தேசிய முன்னணியின் துணைத் தலைவர் முகம்மது ஹசான் கூறினார். மலேசியாவின் பெரித்தா ஹரியான் ஊடகம் அந்தத் தகவலை வெளியிட்டது. எனினும், அவர் இதுகுறித்துக் கூடுதல் விவரங்களைத் தரவில்லை.
நெகிரி செம்பிலான் தேர்தலில் போட்டியிடவிருக்கும் தேசிய முன்னணியின் வேட்பாளர்களை அறிமுகப்படுத்தும் நிகழ்ச்சியில் திரு முகம்மது ஹசான் பேசினார். எஞ்சிய 11 வேட்பாளர்களை மறுதரப்பு பின்னர் வெளியிடும் என்றார் அவர்.
கிளவாங், செர்ட்டிங், லோபாக், சிகாமட், அம்பாங்கான், புக்கிட் கெப்பாயாங், மாம்பாவ், பரோய், லுக்குட், பாகான் பினாங்கு, கெமாஸ் ஆகியவை அந்தத் தொகுதிகள் என்று பெரித்தா ஹரியான் தெரிவித்தது.

