கோலா பிலா: மாறிவரும் அரசியல் சூழல், புதிய கூட்டணிகளால் ஏற்படும் சவால்கள் இருந்தபோதிலும், சனிக்கிழமை (ஆகஸ்ட் 1) நடைபெறும் தேர்தலில் 21 அல்லது 22 இடங்களைக் கைப்பற்றி, நெகிரி செம்பிலான் மாநிலத்தைப் பெரும்பான்மையுடன் தக்கவைத்துக் கொள்வதை பக்கத்தான் ஹரப்பான் கூட்டணி நோக்கமாகக் கொண்டுள்ளது.
இருப்பினும், பிரிவினைவாதச் சொல்லாடல்களுக்குப் பதிலாக, ஒற்றுமை மற்றும் மலேசியா மடானி கோட்பாட்டின் அடிப்படையில் இந்தக் கூட்டணி தொடர்ந்து தீர்வுகளை வழங்கும் என்று பக்க்கத்தான் தேர்தல் பிரிவு இயக்குநர் அமிருதின் ஷாரி கூறினார்.
மாநில அரசை அமைக்கத் தேவையான 19 இடங்களைப் பெறுவதில் பக்கத்தான் நம்பிக்கையுடன் இருப்பதாகவும், 2018ல் ஆட்சிக்கு வந்ததிலிருந்து அதன் செயல்பாடுகள் குறித்த வாக்காளர்களின் மதிப்பீட்டின் அடிப்படையில் அந்த எண்ணிக்கையை மேம்படுத்த முடியும் என்று நம்புவதாகவும் அவர் கூறினார்.
“எங்களின் குறைந்தபட்ச இலக்கு 19 இடங்கள். ஆனால், ஆதரவு அதிகமாக இருந்தால், நாங்கள் 21 அல்லது 22 இடங்களை வெல்ல முடியும் என்று நம்புகிறோம். அதுவே எங்களின் மேலான கணிப்பு,” என்று அவர் வியாழக்கிழமை (ஜூலை 30) இரவு கோலா பிலாவில் உள்ள மெலாங் சதுக்கத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சிக்குப் பிறகு செய்தியாளர்களிடம் கூறினார்.
முதலமைச்சர் அமினுதீன் ஹரூனின்கீழ் கடந்த இரண்டு பதவிக் காலங்களில் பக்கத்தானின் செயல்பாடுகளை வாக்காளர்களே மதிப்பிடுவர் என நம்புவதாக அவர் கூறினார்.
2018ல் பக்கத்தான் 20 இடங்களையும், தேசிய முன்னணியின் ஒத்துழைப்புடன் 2023ல் மொத்தம் 31 இடங்களையும் வென்றதை அவர் சுட்டிக்காட்டினார்.
“இந்த முறை சவால் வித்தியாசமானது. ஏனெனில், தேர்தல் களமும் அரசியல் கூட்டணிகளும் மாறியுள்ளன. அந்தச் சவால்களை நாங்கள் உணர்ந்துள்ளோம். மேலும், மாநில அரசைத் தொடர்ந்து அமைப்பதற்குத் தேவையான கணிசமான இடங்களைப் பெறுவதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறோம்,” என்றும் அவர் கூறினார்.
“இந்தத் தேர்தல் ஒரு புதிய சூழலை அளிக்கிறது. இன அடிப்படையில் மக்களைப் பிரிக்கும் சொல்லாடல்களுக்குப் பதிலாக, மலேசியா மடானி கோட்பாடு மற்றும் தேசிய ஒற்றுமையின் அடிப்படையிலான தீர்வுகளை நாங்கள் தொடர்ந்து வழங்குவோம்,” என்றும் திரு அமினுதீன் கூறினார்.

