இஸ்ரேலுடன் பேச்சு நடத்துவது சரணடைவதற்குச் சமம்: ஹிஸ்புல்லா திட்டவட்டம்

இஸ்ரேலுடன் பேச்சு நடத்துவது சரணடைவதற்குச் சமம்: ஹிஸ்புல்லா திட்டவட்டம்

படம்: ராய்ட்டர்ஸ்

26 Mar 2026 - 10:32 am

1 mins read

பெய்ரூட்: லெபனான்மீது இஸ்ரேல் கடுமையான தாக்குதல்களை நடத்திவரும் நிலையில், அந்நாட்டுடன் பேச்சு நடத்துவது சரணடைவதற்குச் சமம் என்று ஹிஸ்புல்லா அமைப்பின் தலைவர் நயிம் காசிம் புதன்கிழமை (மார்ச் 25) கூறியுள்ளார்.

அதே வேளையில், லெபனான் எல்லைக்குள் இஸ்ரேலிய ராணுவப் படைகள் ஓர் ‘உண்மையான பாதுகாப்பு மண்டலத்தை’ விரிவுபடுத்தி வருவதாக இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாகு கூறியுள்ளார்.

இஸ்ரேலியத் தரைப்படைகள் லெபனானுக்குள் ஊடுருவ முயலும் நிலையில், அவற்றின்மீது தாக்குதல்களை நடத்தியுள்ளதாக ஹிஸ்புல்லா கூறியுள்ளது.

ஐநா தலைமைச் செயலாளர் எச்சரிக்கை

தென் லெபனானில் இருதரப்புக்கும் இடையே போர் தீவிரமடைந்துள்ள நிலையில், ஐக்கிய நாட்டு நிறுவனத் தலைமைச் செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ் கவலை தெரிவித்துள்ளார்.

“காசாவில் நிகழ்ந்த பேரழிவு லெபனானிலும் நடந்துவிடக்கூடாது,” என்று அவர் எச்சரித்தார்.

முன்னதாக, இஸ்ரேலிய அதிகாரிகளும் லெபனானில் தங்களின் இலக்குக் குறித்துப் பேசியபோது, காஸாவுடன் ஒப்பிட்டு, கருத்துத் தெரிவித்திருந்தனர்.

“ஹிஸ்புல்லா அமைப்பு, இஸ்ரேல் மீதான தாக்குதல்களை நிறுத்த வேண்டும். அதேபோல், இஸ்ரேல் தனது ராணுவ நடவடிக்கைகளையும் லெபனான் மீதான வான்வழித் தாக்குதல்களையும் நிறுத்த வேண்டும். இத்தாக்குதல்கள் அப்பாவி மக்களையே மிகக் கடுமையாகப் பாதிக்கின்றன,” என்று ஐநாவில் செய்தியாளர்களிடம் திரு குட்டரெஸ் கூறினார்.

குறிப்புச் சொற்கள்