பெட்டாலிங் ஜெயா: ஃபார்முலா ஒன் (எஃப் ஒன்) கார் பந்தயத்தை மீண்டும் மலேசியாவில் நடத்துவது குறித்து அரசாங்கம் தீவிரமாக ஆலோசித்து வருவதாக மலேசியப் பிரதமர் அன்வார் இப்ராகிம் தெரிவித்துள்ளார்.
செப்பாங் அனைத்துலக கார் பந்தய சுற்றுத்திடலில் ஞாயிற்றுக்கிழமை (அக்டோபர் 4) நடைபெற்ற ‘பஹ்ரைன் கிராண்ட் பிரீ’ போட்டியைக் காண வந்திருந்த அவர், ‘ஸ்கை ஸ்போர்ட்ஸ்’ ஊடகத்திற்குப் பேட்டியளித்தார்.
“மீண்டும் எஃப்1 கார் பந்தயம் நடைபெறுவதை ஆவலுடன் எதிர்நோக்கியுள்ளேன். நாங்கள் இது குறித்து ஆலோசித்து வருகிறோம்,” என்றார் திரு அன்வார்.
இருப்பினும், ஆண்டுதோறும் எஃப்1 பந்தயம் நடத்துவதை மீண்டும் மலேசியா தொடருமா என்பது குறித்த கூடுதல் விவரங்களை அவர் தெரிவிக்கவில்லை.
முன்னதாக, ஞாயிற்றுக்கிழமை பெய்த கனமழை காரணமாக எஃப்1 பந்தயம் தாமதமாகத் தொடங்கப்பட்டது.
பந்தயப் பாதையைச் சுற்றி அதிக அளவிலான நீர் தேங்கியிருப்பதாக அதனைப் பார்வையிட்ட குழுவினர் கூறினர்.
அதனால், பிற்பகல் 3 மணிக்குத் தொடங்கத் திட்டமிடப்பட்டிருந்த பந்தயம் மாலை 4.35 மணிக்குத் தொடங்கியது.
மழையில் தாம் நனைந்துவிட்டாலும் உற்சாகத்துடன் இருப்பதாக திரு அன்வார் கூறினார்.
“நான் மழையில் நன்றாக நனைந்துவிட்டேன். ஆனாலும் மிகவும் உற்சாகமாக இருக்கிறேன். பாருங்கள், இந்த நாடே கொண்டாடிக்கொண்டிருக்கிறது,” என்றார் அவர்.
இந்நிகழ்வின் போது, மதானி நுழைவுச்சீட்டுகளை வாங்கிய பார்வையாளர்களையும் அன்வார் சந்தித்துப் பேசினார்.
அதிகமான மக்கள் இந்தப் பந்தயத்தை நேரடியாக அனுபவிக்க வாய்ப்பளிக்கும் வகையில், ‘மைகாட்’ அடையாள அட்டை வைத்திருந்த மலேசியர்களுக்கு, மூன்று நாள் பந்தயத்துக்கான நுழைவுச்சீட்டுகள் 200 ரிங்கிட்டுக்கு விற்கப்பட்டன.
எஃப்1 பந்தயச் சூழல் மிகவும் உயிரோட்டமாகவும் பந்தயப் பாதையின் காட்சி சிறப்பாகவும் இருந்ததாக திரு அன்வார் தெரிவித்தார்.
