பெஜூவாங், பெர்சத்து இணைவது குறித்து பேச்சுவார்த்தை

பெஜூவாங், பெர்சத்து இணைவது குறித்து பேச்சுவார்த்தை

1 mins read
da31297f-2c27-4dec-8dac-7166efca72ad
பெஜூவாங் கட்சியின் தலைவர் முக்ரிஸ் மகாதீரும் (இடமிருந்து 4வது) பெர்சத்து கட்சியின் தலைவர் முகைதின் யாசினும் (இடமிருந்து 5வது) வெள்ளிக்கிழமை (மார்ச் 13) காலை சந்தித்துப் பேசினர். - படம்: தமிழ் மலர்

கோலாலம்பூர்: பெஜூவாங் கட்சியின் தலைவர் முக்ரிஸ் மகாதீரும் பெர்சத்து கட்சியின் தலைவர் முகைதின் யாசினும் வெள்ளிக்கிழமை (மார்ச் 13) அன்று காலை சந்தித்து அவ்விரு கட்சிகளும் இணைவது குறித்து பேச்சுவார்த்தை நடத்தினர். சுமார் இரண்டு மணி நேரம் நீடித்த இந்தச் சந்திப்பு கோலாலம்பூரில் உள்ள புக்கிட் டாமன்சாராவில் நடைபெற்றது.

அந்தச் சந்திப்பில், இரு கட்சிகளுக்கிடையிலான ஒற்றுமை மற்றும் எதிர்கால அரசியல் ஒத்துழைப்பு உள்ளிட்ட பல்வேறு முக்கிய அம்சங்கள் குறித்து விவாதிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இரு தலைவர்களும் தங்களது கட்சித் தோழர்களுடன் சேர்ந்து நாட்டின் தற்போதைய அரசியல் நிலைமை மற்றும் பொதுமக்களை நேரடியாகப் பாதிக்கும் பல்வேறு பிரச்சினைகள் குறித்தும் கருத்துகளைப் பரிமாறிக் கொண்டனர்.

“இந்தச் சந்திப்பின் இறுதியில், பெஜூவாங் மற்றும் பெர்சத்து கட்சிகள் இனத்திற்காகவும், சமயத்திற்காகவும், நாட்டிற்காகவும் நடைபெறும் போராட்டத்தைப் பாதுகாக்க இணைந்து செயல்பட உறுதியும் தீர்மானமும் எடுத்துள்ளன,” என்று இரு கட்சிகளின் ஃபேஸ்புக் பக்கங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தச் சந்திப்பில் பெர்சத்து கட்சியின் துணைத் தலைவர் அக்மத் பைசல் அசுமு மற்றும் கட்சியின் தலைமைச் செயலாளர் முகமது அஸ்மின் அலி ஆகியோரும் கலந்துகொண்டனர்.

அத்துடன், அந்தச் சந்திப்பின்போது எடுக்கப்பட்ட சில புகைப்படங்களும் பெஜூவாங் கட்சியின் ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளன என்று தமிழ் மலர் செய்தி கூறுகிறது.

குறிப்புச் சொற்கள்