சரவாக்கில் மோசமடைந்த புகைமூட்டம்: செயற்கை மழைக்கு ஏற்பாடு

சரவாக்கில் மோசமடைந்த புகைமூட்டம்: செயற்கை மழைக்கு ஏற்பாடு

3 mins read
f82ff177-5848-41e9-860a-a4785b62fd8a
சரவாக்கில் காற்றின்தரம் மோசமடைந்துள்ளது. - படம்: த ஸ்டார்
Google News Preferred Icon

ஷா ஆலம்: சரவாக் மாநிலத்தின் சில பகுதிகளில் புகைமூட்டம் அபாயகரமான நிலையை எட்டியுள்ளதைத் தொடர்ந்து, அங்கு கூடிய விரைவில் செயற்கை மழை பொழிவிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று மலேசிய துணைப் பிரதமர் டாக்டர் அகமட் ஸாஹித் ஹமிடி தெரிவித்துள்ளார்.

தேசிய பேரிடர் மேலாண்மை அமைப்பு, மலேசிய வானிலை ஆய்வு நிலையம், மலேசிய விமானப் படை ஆகிய அமைப்புகள் இணைந்து இந்த நடவடிக்கையைச் செயல்படுத்தவுள்ளதாக அவர் கூறினார்.

சரவாக்கின் சில பகுதிகளில் காற்றுத் தரக் குறியீடு 500 வரை பதிவாகியுள்ளதாகவும், இது மிகவும் அபாயகரமான நிலை என்றும் அகமட் ஸாஹித் குறிப்பிட்டார்.

அபாயகரமான நிலையில் உள்ள இடங்கள் குறித்துக் கூர்ந்து கவனித்து ஆலோசனை வழங்குமாறு மலேசிய வானிலை ஆய்வுத் துறை கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

“சரவாக் மாநிலத்திற்கு உடனடியாக உதவ வேண்டும் என்பதால், இந்த ஒருங்கிணைப்புப் பணிகளை நாங்கள் அவசர அடிப்படையில் மேற்கொண்டு வருகிறோம்,” என்றும் அவர் தெரிவித்தார்.

சரவாக்கின் முதல்வர் டக்ளஸ் உக்கா எம்பாஸ், “ஒருவேளை அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டால், பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள அனைத்து அரசு, தனியார் அலுவலகங்களும் மூடப்படும். அத்தியாவசிய சேவைகள் மட்டுமே இயங்க அனுமதிக்கப்படும்,” என்று தெரிவித்துள்ளதாக ‘தி எட்ஜ் மலேசியா’ செய்தி வெளியிட்டுள்ளது.

இந்தோனீசியாவில் ஏற்பட்டுள்ள காட்டுத்தீயால் தென்கிழக்காசியாவின் பல பகுதிகளில் காற்றின் தரத்தை ஆரோக்கியமற்ற நிலைக்குக் கொண்டு சென்றுள்ளது.

இதன் காரணமாகப் பள்ளிகள் மூடப்பட்டு வருவதோடு, லட்சக்கணக்கான பொதுமக்கள் வீட்டிற்குள்ளேயே இருக்குமாறு அதிகாரபூர்வ எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன.

தென்கிழக்காசியாவில் காட்டுத்தீ என்பது பருவகால நிகழ்வாக இருந்தாலும், ‘எல் நினோ’ வானிலை மாற்றத்தால் ஏற்பட்டுள்ள நீண்டகால வறட்சியும் அதிக வெப்பமும், இப்பிரச்சினை மேலும் பரவலாகவும் நீண்டகால அவசரநிலையாகவும் உருவெடுக்கும் அபாயத்தை அதிகரித்துள்ளன.

இந்தோனீசியாவில் ஆகஸ்ட் மாதத்தில் காட்டுத்தீ உருவான மையங்களின் எண்ணிக்கை கிட்டத்தட்ட 10,000ஆக உயர்ந்துள்ளது. இது, கடந்த இரண்டு ஆண்டுகளைவிட 10 மடங்கு அதிகம் என்பதோடு, 2026ஆம் ஆண்டில் இதுவரை 200,000 ஹெக்டருக்கும் அதிகமான நிலப்பரப்பு தீயில் கருகியுள்ளது.

புகைமூட்டம் காரணமாக, பிலிப்பீன்ஸ் தலைநகரில் அதிக மக்கள் தொகையைக் கொண்ட மிகப்பெரிய நகரமான கெசான் சிட்டியில், செப்டம்பர் 1 அன்று அரசுப் பள்ளிகளில் நேரடி வகுப்புகள் ரத்து செய்யப்பட்டன.

“பொதுமக்கள், குறிப்பாக, காற்று மாசுபாட்டால் எளிதில் பாதிக்கப்படக்கூடியவர்கள், வெளியில் அதிக நேரம் செல்வதைத் தவிர்க்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்,” என்று அந்நாட்டின் சுற்றுச்சூழல் மேலாண்மை வாரியம் ஃபேஸ்புக்கில் தெரிவித்துள்ளது.

மேலும், பொதுமக்கள் வீட்டிற்குள்ளேயே இருக்குமாறும், வெளியே செல்லும்போது முகக்கவசம் அணியுமாறும் அது கேட்டுக்கொண்டுள்ளது.

கலிமந்தான் நிலப்பகுதியில் தீயணைப்புப் பணிகளுக்காக ஆயிரக்கணக்கான தீயணைப்பாளர்கள் களமிறக்கப்பட்டுள்ளனர் என்றும் விமானங்கள் மூலம் தண்ணீர் ஊற்றித் தீயை அணைக்கும் பணிகள் நடைபெற்று வருவதாகவும் இந்தோனீசிய சுற்றுச்சூழல் அமைச்சின் சுற்றுச்சூழல் சட்ட அமலாக்கப் பிரிவின் துணைத் தலைவர் ரிசால் இராவான் தெரிவித்துள்ளதாக அண்டாரா செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.

போர்னியோவின் இந்தோனீயப் பகுதியிலும் சுமத்ரா தீவில் உள்ள நகரங்களிலும் காற்று மாசுபாடு அபாயகரமான நிலையை எட்டியுள்ளதால் அன்றாட வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

அங்குள்ள பள்ளிகளில் இணையம்வழியாக வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ள நிலையில், பொதுமக்கள் வெளியே செலவிடும் நேரத்தைக் குறைத்து வருகின்றனர்.

குறிப்புச் சொற்கள்