நேப்பாளத்தில் ஆற்றில் விழுந்த பேருந்து: மரண எண்ணிக்கை 41 ஆனது

2 mins read
ba03fd47-8f53-4341-bc2f-a1a20dc7704f
பெரும்பாலும் இந்தியப் பயணிகளைக் கொண்ட பேருந்து ஒன்று வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 23ஆம் தேதி) அன்று நேப்பாளத்தின் மார்ஸ்யங்டி ஆற்றில் விழுந்தது. - படம்: ராய்ட்டர்ஸ்

மும்பை: நேப்பாளத்தின் தனாவுன் வட்டாரத்தில் பேருந்து ஒன்று ஆற்றில் விழுந்த சம்பவத்தில் மரண எண்ணிக்கை 41ஆக உயர்ந்துள்ளது.

இதை மகாராஷ்டிர அமைச்சர் கிரிஷ் மகஜன் சனிக்கிழமை (ஆகஸ்ட் 24ஆம் தேதி) அன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.

பெரும்பாலும் இந்தியப் பயணிகளைக் கொண்ட பேருந்து ஒன்று வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 23ஆம் தேதி) அன்று நேப்பாளத்தின் தனாவுன் வட்டாரத்திலுள்ள மார்ஸ்யங்டி ஆற்றில் வெள்ளிக்கிழமை விழுந்தது.

மகாராஷ்டிர அரசு நேப்பாள அரசுடன் தொடர்பில் இருப்பதாகவும் அந்நாட்டு நிர்வாகத்துடனும் புதுடெல்லியில் உள்ள நேப்பாள தூதரகத்துடனும் இணைந்து துயர்துடைப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக திரு மகஜன் செய்தியாளர் சந்திப்பில் விளக்கினார்.

“இதில் 41 பேர் உயிரிழந்துள்ளனர். டெல்லியில் உள்ள நேப்பாள தூதரகத்துடன் நாங்கள் தொடர்பில் உள்ளோம். நேப்பாள ராணுவம் 12 பேரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளது,” என்றும் திரு மகஜன் கூறினார்.

பெரும்பாலும் மகாராஷ்டிராவின் ஜலகோன் வட்டாரத்தைச் சேர்ந்த பயணிகளுடன் அந்தப் பேருந்து அங்கு பொக்காரா என்ற இடத்தில் பயணிகளை ஈர்க்கும் மலைப்பகுதியிலிருந்து தலைநகர் காட்மாண்டுவுக்கு திரும்பிக் கொண்டிருந்தது. அப்பொழுது 150 அடி ஆழமுள்ள பள்ளத்தாக்கில் ஓடிக்கொண்டிருந்த ஆற்றில் விழுந்தது.

இறந்தவர்களின் உடல்கள், காயமுற்றோர் உத்தரப் பிரதேசத்தின் மகாராஜ்கஞ்ச் வட்டாரம் வழியாக சனிக்கிழமை மதியம் இந்தியா கொண்டு வரப்படுவர் என்று மகாராஷ்டிர மாநில பேரிடர் நிர்வாக அமைப்பு தெரிவித்தது.

இறந்தோர், காயமுற்றோர் என அனைவரையும் வர்த்தக ரீதியிலான விமானம் மூலம் இந்தியாவுக்கு கொண்டுவருவது சாத்தியமில்லை என்பதால் சிறப்பு விமானத்துக்கு ஏற்பாடு செய்யுமாறு இந்திய ஆகாயப் படைக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டு இருப்பதாக மகாராஷ்டிர மாநில அரசு கூறியது.

குறிப்புச் சொற்கள்