நேப்பாளத் தேர்தல்: முன்னாள் பிரதமரை வீழ்த்திய ‘ராப்’ பாடகர் பாலேந்திர ஷா

நேப்பாளத் தேர்தல்: முன்னாள் பிரதமரை வீழ்த்திய ‘ராப்’ பாடகர் பாலேந்திர ஷா

நேப்பாள இளையர்களின் அரசியல் மாற்றத்துக்கான நம்பிக்கை நட்சத்திரம் மிடுக்கான உடையணியும் பாலேன்.
படம்: ஏஎஃப்பி

08 Mar 2026 - 10:52 am

2 mins read

காத்மாண்டு: நேப்பாளத்தின் நாடாளுமன்றத் தேர்தல் கடந்த வியாழக்கிழமை (மார்ச் 5) நடந்தது.

நாடெங்கும் ஆறு மாதங்களுக்குமுன் ஆட்சிக்கு எதிராக இளையர்களால் முன்னெடுக்கப்பட்ட போராட்டங்கள் வெடித்தன. ஆட்சிக் கவிழ்ப்புக்குப் பிறகு நடந்துள்ள தேர்தலின் முடிவு சனிக்கிழமை (மார்ச் 7) வெளிவந்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அரசியலுக்கு வருமுன் நவீன ‘ராப்’ பாடல்களை இயற்றி, ஊழலுக்கு எதிராகப் புரட்சிகரமான சிந்தனைகளை வெளிப்படுத்திய பாலேந்திர ஷா, அடுத்த பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்படவுள்ளார். அவரது ராஷ்டிரிய சுதந்திரக் கட்சி (RSP) தற்போது தேர்தல் ஆணையம் வெளியிடும் முடிவுகளின்படி முன்னிலை வகிக்கிறது.

கடந்த 50 ஆண்டுகளாக நேப்பாள் அரசியலில் பழம்பெரும் தலைவராகத் திகழ்ந்து நான்கு முறை பிரதமராகப் பதவி வகித்தவரும் மார்க்ஸிய கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவருமான 74 வயது கே.எம்.ஷர்மா ஒலியை அவரது ‘ஜப்பா-5’ தொகுதியிலேயே எதிர்த்து நின்று வெற்றிக் கனியைப் பறித்துள்ளார் பாலேந்திர ஷா.

ஏற்கெனவே கடந்த 2022ஆம் ஆண்டு மே மாதம் காத்மாண்டு மேயர் பதவிக்கு முதல் சுயேச்சை வேட்பாளராகக் போட்டியிட்டு, வெற்றிபெற்று பலரது கவனத்தை ஈர்த்தவர் 35 வயதான சீர்திருத்தவாதி பாலேந்திர ஷா .

பாலேன் என்று அழைக்கப்படும், மிடுக்கான உடையணியும் அவர் நேப்பாள இளையர்களின் அரசியல் மாற்றத்துக்கான நம்பிக்கை நட்சத்திரமாகக் கருதப்படுகிறார்.

பொறியியல் பட்டதாரியான பாலேன் வழங்கிய நவீன ராப் இசை, இணையத்தில் மில்லியன்கணக்கானோரைக் கவர்ந்திழுத்தது. பாரம்பரிய ஊடகங்களைவிட அவர் இணையத்தின் வழியாகவே ரசிகர்களுடன் தொடர்புகொண்டு ஆதரவாளர்களை வளர்த்துக்கொண்டார்.

30 மில்லியன் மக்கள் தொகை கொண்ட நேப்பாளத்தின் நிர்வாகச் சீர்கேடு, போக்குவரத்துப் பிரச்சினை, அரசாங்க வரிவிதிப்பைத் தவிர்த்தல் போன்ற பற்பல சமூக அவலங்களுக்கு எதிராக அவர் குரல் கொடுத்துவந்தவர்.

குறிப்புச் சொற்கள்
நேப்பாளம்தேர்தல்பிரதமர்வேட்பாளர்வெற்றிஇளையர்இசைஇணையம்போராட்டம்