நேப்பாள வெள்ளம்: இடிபாடுகளில் இருந்து 97 வயது மூதாட்டி மீட்பு

நேப்பாள வெள்ளம்: இடிபாடுகளில் இருந்து 97 வயது மூதாட்டி மீட்பு

2 mins read
9656edb7-ebb8-431c-9b8e-584c405dd6bf
நேப்பாளத்தில் ஆகஸ்ட் 29ஆம் தேதி திருஷுலி என்ற இடத்தில் இடிபாடுகளிலிருந்து 97 வயது மூதாட்டி மீட்கப்பட்டார். - படம்: ராய்ட்டர்ஸ்
Google News Preferred Icon

காத்மாண்டு: நேப்பாள வெள்ளத்தில் சிக்கி மாயமாகிக் கட்டட இடிபாடுகளுக்குள் சிக்கி இருந்த 97 வயது மூதாட்டியான குணா மாயா போஹரா என்பவர் பத்திரமாக மீட்கப்பட்டார்.

அந்த மூதாட்டியை மீட்க நேப்பாள ராணுவத்திற்குக் கிட்டத்தட்ட நான்கு மணி நேரம் தேவைப்பட்டது.

இதையடுத்து மூதாட்டி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவர், நல்ல உடல் நலத்துடன் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது.

“எனது மகனும், எனது சகோதரரும் கயிறு வழியாகக் கீழே இறங்கி மூதாட்டி உயிருடன் இருப்பதை உறுதி செய்தனர்,” என்று மூதாட்டியின் கொள்ளுப் பேரன் தீபக் போஹரா கூறினார்.

நேப்பாளத்தில் ஏற்பட்ட பேரழிவு வெள்ளத்தில் இதுவரை குறைந்தது 676 உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. மேலும் 300க்கும் மேற்பட்ட இந்தியர்கள் உட்பட ஏறக்குறைய 3,000 பேர் வெள்ளத்தில் சிக்கிக் காணாமல் போயுள்ளனர்.

குடியிருப்புப் பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்து வீடுகள் முதல் கட்டடங்கள் அனைத்தும் அடித்துச் செல்லப்பட்டன.

இதையடுத்து நேப்பாளத்தில் காணாமல் போனவர்களை மீட்கும் பணியில் பேரிடர், நிவாரண மீட்புப் படை தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது.

இந்தியா, சீனா, ஆஸ்திரேலியா, தென்கொரியா ஆகிய நாடுகளைச் சேர்ந்த மீட்புக் குழுவினரும் தேடி மீட்கும் வேலையில் ஈடுபட்டுள்ளனர்.

இதற்கிடையே நேப்பாளத்தில் புதிதாக மழை, இடியுடன்கூடிய மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

நேப்பாள வெள்ளம் குறித்து பேசிய அந்நாட்டின் நிதியமைச்சர் ஸ்வர்னிம் வாக்லே, வெள்ளத்திற்குப் பிறகு நாட்டை மீண்டும் கட்டியெழுப்ப கிட்டத்தட்ட 4 பில்லியன் முதல் 5 பில்லியன் டாலர் வரை தேவைப்படும் என்றார்.

இது, நாட்டின் பொருளாதாரத்தில் கிட்டத்தட்ட பத்தில் ஒரு பங்கிற்குச் சமம் என்று அவர் குறிப்பிட்டார்.

திபெத்தில் ஏற்பட்ட வெள்ளத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 16க்கு உயர்ந்துள்ளதாகச் சீனா கூறியது.

இன்னமும் திபெத்தில் 546 பேரைக் காணவில்லை என்று ஆகஸ்ட் 30ஆம் தேதி உள்ளூர் அதிகாரிகளைச் சுட்டிக்காட்டி சீனாவின் அதிகாரபூர்வ ஊடகம் தெரிவித்தது.

குறிப்புச் சொற்கள்