காத்மாண்டு: நேப்பாளத்தில் ஊழல் எதிர்ப்புப் போராட்டங்கள் வலுத்ததைத் தொடர்ந்து, அந்நாட்டுப் பிரதமர் கே.பி.ஷர்மா ஒலி செவ்வாய்க்கிழமை (செப்டம்பர் 9) பதவி விலகினார்.
சமூக ஊடகத் தடைக்கு எதிராக நடந்த போராட்டங்களில் 22 பேர் உயிரிழந்ததைத் தொடர்ந்து, ஊரடங்கு உத்தரவையும் மீறி போராட்டக்காரர்கள் காவல்துறையினருடன் மோதினர்.
போராட்டங்கள் தீவிரமடைந்ததைத் தொடர்ந்து, அரசாங்கம் சமூக ஊடகத் தடையை நீக்கியது. நாடாளுமன்றத்திற்குள் நுழைய முயன்ற போராட்டக்காரர்கள்மீது காவல்துறையினர் கண்ணீர்ப்புகைக் குண்டுகளையும் ரப்பர் தோட்டாக்களையும் வீசினர். இந்தக் கலவரத்தில் 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
ஆனால், செவ்வாய்க்கிழமையும் போராட்டங்கள் தொடர்ந்ததால், பிரதமர் பதவியிலிருந்து விலக வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு திரு ஒலி, 73, தள்ளப்பட்டார். இதனால், நேப்பாளம் மீண்டும் அரசியல் நிச்சயமற்ற நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.
அதிபர் ராம்சந்திர பௌடலுக்கு திரு ஒலி எழுதிய பதவி விலகல் கடிதத்தில், “நாட்டில் நிலவும் மோசமான சூழ்நிலை காரணமாக, இந்தப் பிரச்சினைக்குத் தீர்வுகாணவும் அரசியலமைப்பின்படி அரசியல் ரீதியாக இதைத் தீர்க்க உதவவும் நான் இன்று பதவி விலகுகிறேன்,” என்று குறிப்பிட்டார்.
திரு ஒலியின் பதவி விலகல் ஏற்றுக்கொள்ளப்பட்டதாகவும் புதிய பிரதமரைத் தேர்ந்தெடுப்பதற்கான ‘செயல்முறையையும் விவாதங்களையும்’ அதிபர் தொடங்கியுள்ளதாக திரு பௌடலின் உதவியாளர் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தார்.
திரு ஒலியின் பதவி விலகல் ஏற்றுக்கொள்ளப்பட்டதால், மக்கள் அமைதி காக்கும்படி ராணுவம் தனது எக்ஸ் சமூக ஊடகப் பக்கத்தில் கேட்டுக்கொண்டது.
தற்போதைய பதவிக்காலத்துக்கு முன்பு, திரு ஒலி இருமுறை பிரதமராகப் பதவி வகித்திருந்தார். முதலாவதாக, 2015-2016 காலத்திலும் இரண்டாவது முறையாக 2018-2021 வரையிலும் அவர் பிரதமர் பதவியில் இருந்தார்.
தொடர்புடைய செய்திகள்
அவரது அமைச்சரவை சகாக்கள் இருவர், ‘நெறிமுறை சார்ந்த காரணங்களுக்காக’ தாங்கள் தொடர விரும்பவில்லை எனக் கூறி திங்கட்கிழமை இரவு பதவி விலகினர்.
போராட்டக்காரர்கள் மூட்டிய தீயிலிருந்து எழும் புகை, விமானப் பயணங்களுக்கு ஆபத்தை விளைவிக்கும் என்பதால், நேப்பாளத்தின் முக்கிய அனைத்துலக நுழைவாயிலான காத்மாண்டு விமான நிலையம் உடனடியாக மூடப்பட்டதாக நேப்பாள சிவில் விமானப் போக்குவரத்து ஆணையம் தெரிவித்தது.
நேப்பாள பயணத்தைத் தவிர்க்க அறிவுறுத்தல்
நூறாயிரக்கணக்கான நேப்பாள ஊழியர்களைக் கொண்டுள்ள அண்டை நாடான இந்தியா, சம்பந்தப்பட்ட அனைத்துத் தரப்பும் அமைதி காத்து, பேச்சுவார்த்தை மூலம் பிரச்சினைகளைத் தீர்க்கும் என தான் நம்புவதாகச் சொன்னது.
நிலைமை சீரடையும் வரை நேப்பாளத்திற்குச் செல்வதைத் தவிர்க்குமாறு இந்திய வெளியுறவு அமைச்சு அறிவுறுத்தியுள்ளது. தற்போது நேப்பாளத்தில் இருக்கும் இந்தியர்கள், வீட்டிலேயே இருக்குமாறும் வீதிகளில் செல்வதைத் தவிர்க்குமாறும் உள்ளூர் அதிகாரிகள் மற்றும் காத்மாண்டுவில் உள்ள இந்தியத் தூதரகத்தின் பாதுகாப்பு வழிமுறைகளைப் பின்பற்றுமாறும் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.
காத்மாண்டு விமான நிலையம் மூடப்பட்டதால், இந்தியாவிலிருந்து அங்கு புறப்படும், இந்தியா செல்லும் விமானச் சேவைகளும் பாதிக்கப்பட்டுள்ளன.