சமூக ஊடகத்தின் மீதான தடையை ரத்து செய்த நேப்பாளம்

1 mins read
4560214a-a127-406b-b3d8-ab8bf1f0417a
சமூக ஊடகங்கள்மீது விதித்திருந்த தடையை எதிர்த்து நேப்பாளத்தில் திங்கட்கிழமை (செப்டம்பர் 8) பெரிய அளவில் போராட்டம் வெடித்தது.  - படம்: ராய்ட்டர்ஸ்

காத்மாண்டு: நேப்பாள அரசாங்கம் அந்நாட்டில் சமூக ஊடகங்கள்மீது விதித்திருந்த தடையை நீக்கியுள்ளது.

சமூக ஊடகங்கள்மீது விதித்திருந்த தடையை எதிர்த்து நேப்பாளத்தில் திங்கட்கிழமை (செப்டம்பர் 8) பெரிய அளவில் போராட்டம் வெடித்தது. அதில் 19 பேர் மாண்டனர்.

அதையடுத்து தடையை ரத்து செய்வதாக நேப்பாளத்தின் தகவல் தொடர்பு அமைச்சர் பிருதிவி சுபா கூருங் செவ்வாய்க்கிழமை (செப்டம்பர் 9) அறிக்கை வெளியிட்டார்.

தற்போது நேப்பாளத்தில் சமூக ஊடகங்கள் எப்போதும் போல் செயல்படுவதாக அவர் கூறினார்.

கடந்த வாரம் (செப்டம்பர் 5) இன்ஸ்டகிராம், ஃபேஸ்புக், எக்ஸ், வாட்ஸ்அப் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட சமூக ஊடகங்களை நேப்பாளம் முடக்கியது.

அதையடுத்து திங்கட்கிழமை (செப்டம்பர் 8) நேப்பாளத்தில் உள்ள இளைய தலைமுறையினர் நாட்டில் அதிக அளவில் ஊழல் நடப்பதாகவும் சமூக ஊடகங்களைத் தடை செய்ததற்காகவும் போராட்டத்தில் இறங்கினர்.

பத்தாயிரத்திற்கும் அதிகமான இளையர்கள் காத்மாண்டு, பொக்ஹாரா, புட்வால், தாரன் உள்ளிட்ட இடங்களில் பேரணி நடத்தினர்.

அதில் 100க்கும் அதிகமானவர்களுக்குக் காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில், நேப்பாளத்தின் மனித உரிமை ஆணையம் காவல்துறையின் கடுமையான நடவடிக்கையைக் கண்டித்துள்ளது.

நேப்பாள அரசாங்கம் இளையர்களின் பிரச்சினைகளைக் கேட்க வேண்டும், அவர்களை ஒடுக்கக் கூடாது என்றும் ஆணையம் கேட்டுக்கொண்டது.

இளையர்களின் கூட்டத்தைக் கலைக்கக் காவல்துறையினர் ரப்பர் தோட்டாக்களைக் கொண்டு சுட்டனர். பின்னர் கண்ணீர்ப் புகைக் குண்டுகளையும் தண்ணீர்ப் பீய்ச்சிகளையும் அவர்கள் பயன்படுத்தினர்.

குறிப்புச் சொற்கள்